ஆடி மாதம் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது அம்மன் வழிபாடும் கூழ் ஊற்றுதலும் தான். இந்த ஆடி மாதம் என்பது பொதுவாக பெண் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதிலும் ஆடி வெள்ளி என்பது மிக மிக விசேஷமான நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. அப்படியான இந்த அற்புதமான நாளில் நம்முடைய கடன் தீர அன்னையை வழிபட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
ஏனெனில் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான குடும்பங்கள் கடன் வாங்கி தான் காலம் கழிக்கின்றனர். கடன் வாங்குவது என்பது அனைவரும் செய்வது தான் ஆனால் ஒரு சில இடங்களில் தினம் தினம் தங்களுடைய தேவைகளுக்கும் குடும்ப செலவுகளுக்குமே கூட கடன் வாங்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்கள். இந்த நிலை மாறி அவர்களும் செல்வ நிலையில் சந்தோஷமாய் வாழ வழிகாட்டக் கூடிய ஒரு அற்புத தீப வழிபாட்டு முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
கடன் தீர ஆடி வெள்ளி தீப வழிபாடு
இந்த வழிபாட்டை இன்றைய நாள் முழுவதும் செய்யலாம். ராகு காலம் எமகண்டம் நேரத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள். இந்த வழிபாடு செய்வதற்கு பூஜை அறையில் முதலில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அது நீங்கள் எப்பொழுதும் ஏற்றும் தீபங்களாக இருக்கலாம். அதே போல் எத்தனை தீபங்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த தீபம் ஏற்றும் முன் வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு விடுங்கள். நிலை வாசலில் சிறிது மாவிலை சொருகி வைத்து விடுங்கள்.
மாவிலை கிடைக்காத பட்சத்தில் வாசனை மலர்களை கூட நிலை வாசலில் வைக்கலாம். அடுத்ததாக ஒரு சிறிய தட்டு எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் உப்பை பரப்பி விடுங்கள். இதற்கு தோலுப்பு கல் உப்பு என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதன் மேல் ஒரு அகல் விளக்கை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்ச திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
அன்னைக்கு நெய்வேத்தியமாக பால் சாதம் அல்லது நெய் சாதம் கலந்து வையுங்கள். இவை இரண்டும் வைக்க முடியவில்லை என்றால் ஒரு டம்ளர் பால் மட்டும் வைத்தால் கூட போதும். இப்போது இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு தீபத்திற்கு முன் நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். இந்த தீபம் கிழக்கு நோக்கி எரியட்டும். நீங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை சொல்ல துவங்குங்கள்.
ஓம் சக்தி பராசக்தி
என்ற இந்த மந்திரத்தை 108 முறை வாய்விட்டு சத்தமாக சொல்ல வேண்டும். இதை மனதிற்குள் சொல்லக்கூடாது நீங்கள் சொல்லும் இந்த வார்த்தையின் ஒளியானது உங்கள் வீடு முழுவதும் கேட்க வேண்டும். இப்படி இன்றைய நாளில் அன்னையை வணங்கும் பொழுது உங்கள் கடன் தொல்லை அனைத்தும் தீர்ந்து செல்வம் பெறுவதற்கான வழி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த வழிபாட்டோடு கடன் இல்லாத வாழ்க்கைக்கு உங்களின் முயற்சியை செலுத்திக் கொண்டே இருங்கள் நிச்சயம் அன்னையின் அருள் ஆசையுடன் நல்லதொரு செல்வ செழிப்பான வாழ்க்கை வாழலாம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலனை அடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.