பிரணவ மந்திரமாக கூறக்கூடிய மந்திரம் ஓம். இந்த ஓம் என்னும் மந்திரம் அனைத்து தெய்வத்திற்கும் பொதுவாக கருதப்படுகிறது. எந்த ஒரு மந்திரத்தை நாம் சொல்ல ஆரம்பித்தாலும் அதன் ஆரம்பம் என்பது ஓம் என்னும் இந்த பிரணவ மந்திரம் தான். இந்த பிரணவ மந்திரத்தை நாம் முழுமனதோடு உச்சரிக்கும் பொழுது நமக்கு எண்ணிய எண்ணம் எல்லாம் நிறைவேறுவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மந்திரத்தை எந்த முறையில் உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஓம் மந்திரத்தை கூறும் முறை
பிரபஞ்சம் தான் இந்த உலகை படைத்தது என்று கூறப்படுகிறது. அந்த பிரபஞ்சம் ஓம் என்னும் மந்திரத்தில் இருந்து தான் பிறந்தது என்றும் கூறப்படுகிறது. ஓம் என்னும் மந்திரத்திற்கு புராணங்களில் பல விதங்களில் வரலாறுகள் கூறப்பட்டு இருக்கின்றன. எதுவாக இருந்தாலும் ஆக்கப் பொருளுக்கு அடித்தளமிட்டது ஓம் என்று கூறலாம். அப்படிப்பட்ட ஓம் என்னும் மந்திரத்தை சில வழிமுறைகளில் நாம் கூறும்பொழுது நமக்கு பல நன்மைகள் ஏற்படும். அந்த வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த ஓம் எனும் மந்திரத்தை இயற்கை சூழல் நிறைந்த இடங்களில் அமர்ந்து முழுமனதோடு நாம் உச்சரிக்க வேண்டும். அதுவும் காலையில் சூரிய உதயம் ஆகும் நேரத்திலோ அல்லது அதற்கு முன்பாக இருக்கக்கூடிய பிரம்ம முகூர்த்த நேரத்திலோ உச்சரிக்க வேண்டும். ஓம் என்று எவ்வளவு நேரம் நீட்ட முடியுமோ அவ்வளவு நேரம் நீட்டி கூற வேண்டும். அப்படி கூறும் பொழுது நம்முடைய இரண்டு கைகளையும் குவித்துக்கொண்டு நம்முடைய இரண்டு நெற்றி பொட்டிலும் வைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய கவனத்தை புருவத்தின் மத்தியில் வைத்துக்கொண்டு மூன்று முறை ஓம் என்று கூற வேண்டும்.
அடுத்ததாக நம்முடைய ஆள்காட்டி விரலை பயன்படுத்தி இரண்டு காதுகளையும் மூடிக்கொண்டு புருவ மத்தியில் கவனத்தை செலுத்தி ஓம் என்று மூன்று முறை கூற வேண்டும். அடுத்ததாக நம்முடைய இரண்டு கைகளையும் குவித்துக்கொண்டு நம்முடைய உச்சந்தலையில் ஒன்றாக சேர்த்து வைத்து புருவ மத்தியில் கவனத்தை செலுத்தி ஓம் என்று மூன்று முறை உச்சரிக்க வேண்டும். இப்படி மூன்று முறையோ, ஐந்து முறையோ, 11 முறையோ உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் இந்த முறையில் உச்சரிக்கும் பொழுது நம் ஆழ் மனதில் நமக்கு தோன்றக்கூடிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நமக்கு சொல்வாக்கு ஏற்படும். அதாவது நாம் சொல்லக்கூடிய சொற்கள் அனைத்தும் பலித்தமாகும். அப்படி பலித்தமாவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியம் ஏற்படும். நம்மை அறியாமலேயே நம்முடைய முகத்தில் ஒருவித தெய்வ கடாட்சம் உண்டாகும். மனதில் தெளிவு பிறக்கும். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தின் நுணுக்கங்களை உணர்ந்து செய்து அதில் வெற்றியும் பெறுவோம்.
இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை அன்று வாங்க வேண்டிய மங்களகரமான பொருட்கள்
மிகவும் எளிமையான இந்த ஓம் மந்திர உச்சாடலை இந்த முறையில் கூறி வாழ்க்கையில் வெற்றிகளை அடைவோம் என்று கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.