முப்பெரும் தேவியரான துர்க்கை, லஷ்மி, சரஸ்வதி இவர்களை வழிபாடு செய்வதற்காகவே வருடத்திற்கு ஒருமுறை 9 நாட்கள் வரும். அந்த ஒன்பது நாட்களை தான் நவராத்திரி என்று கூறுவோம். இந்த நவராத்திரியில் பலரது இல்லங்களிலும் கொலு வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருக்கும். கொலு வைத்து வழிபாடு செய்ய இயலாதவர்கள் கலசம் வைத்தும் வழிபாடு செய்வார்கள். அப்படி கலசம் வைப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் எந்த நாளில் எந்த நேரத்தில் எப்படி கலசம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவராத்திரி கலசம் கட்டும் முறை
நவராத்திரி சமயங்களில் வீட்டில் மேடை அமைத்து அதில் கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. பழைய பொம்மைகளோடு புதிதாக பொம்மை வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடம் கொலு வைத்து வழிபாடு செய்து விட்டால் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இப்படி கொலு வைத்து வழிபாடு செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் கலசம் வைத்து வழிபாடு செய்யலாம். அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த கலசத்தை அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அமாவாசை தினத்தில் காலை 9:15 மணியிலிருந்து 10:15 மணிக்குள் வைக்கலாம் அல்லது அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வியாழக்கிழமை நவராத்திரி ஆரம்பிக்கும் நாள் அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 7:31 மணியிலிருந்து 9:00 மணிக்குள் கலசத்தை கட்டலாம். இந்த கலசத்தை பூஜையறையிலும் வைக்கலாம். ஹாலிலும் வைக்கலாம்.
எந்த இடத்தில் வைப்பதாக இருந்தாலும் முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு பச்சரிசி மாவால் தாமரை பூ கோலம் போட வேண்டும். அடுத்ததாக அதற்கு மேல் ஒரு மனைப் பலகையை வைத்து அந்த மனைப் பலகை மேல் சிவப்பு நிற துணியை விரித்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் பச்சரிசியை கொட்டி பரப்பிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு கலச சொம்பு ஒன்று வேண்டும். பொதுவாக கலசம் வைப்பவர்கள் தண்ணீரை ஊற்றியும் வைக்கலாம். பச்சரிசியை போட்டும் வைக்கலாம்.
தண்ணீர் ஊற்றி வைப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கலச சொம்பில் ஒரு ரூபாய் நாணயம், ஒரு எலுமிச்சம் பழம், இரண்டு ஏலக்காய், சிறிது பச்சை கற்பூரம், சிறிது மஞ்சள், சிறிது குங்குமம், சிறிது ஜவ்வாது இவற்றை போட்டு இதில் தண்ணீரை ஊற்றி வைக்கலாம். பச்சரிசியை வைத்து கலசம் வைப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த பச்சரிசியில் ஒரு மஞ்சள் கொம்பு அதாவது விரலி மஞ்சள் ஒன்று, இரண்டு ஏலக்காய், ஒரு எலுமிச்சம் பழம், ஒரு ரூபாய் நாணயம், ஒரு ஜாதிக்காய் இவற்றை போட்டு வைக்க வேண்டும்.
இந்த கலச சொம்பின் வாயில் ஒன்பது மா இலைகள் அல்லது 9 வெற்றிலைகள் அல்லது 9 அரசு இலைகளை வைத்து அதற்கு நடுவே மஞ்சள் பூசிய தேங்காயில் மூன்று இடங்களில் சந்தனம் குங்குமம் வைத்து வைக்க வேண்டும். இதுவே கலசம் கட்டும் முறையாகும். பிறகு வரலட்சுமி விரதத்தின் சமயத்தில் எப்படி எல்லாம் நாம் அலங்காரம் செய்து அம்மனை தயார் செய்வோமோ அதேபோல் இந்த கலசத்திற்கும் அம்மனின் பாவாடை நகைகள் முகம் போன்றவற்றை வைத்து அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒன்று சேர மந்திரம்
இந்த முறையில் கலசம் கட்டி நவராத்திரியில் முப்பெரும் தேவியரை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.