ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதிங்கிப் போய் நிற்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் யாராவது ஒருவர் நமக்கு உதவி செய்ய மாட்டார்களா என்று கூட ஏங்குவார்கள் அந்த நேரத்தில் பலரும் சரணாகதி அடையக்கூடியது தெய்வத்தின் திருவடியில் தான். ஒரு சிலர் குலதெய்வத்திடம் சென்று வழிபாடு செய்வார்கள் இன்னும் சிலரோ இஷ்ட தெய்வத்திடம் சென்று வழிபாடு செய்வார்கள். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கு யாருடைய உதவியும் கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் அன்னபூரணி தாயை எந்த முறையில் வழிபாடு செய்தால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர்க்கும் அன்னபூரணி வழிபாடு
பலரது இல்லங்களிலும் அன்னபூரணி சிலை என்பது இருக்கும். இன்னும் சிலர் தங்களுடைய சமையலறையில் அன்னபூரணியின் படத்தையோ அல்லது சிலையோ வைத்திருப்பார்கள். இப்படி அன்னபூரணி தாயை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம் வீட்டில் அன்னத்திற்கு எந்தவித குறையும் வராது. அதாவது உண்ணும் உணவிற்கு எந்த வித குறையும் வராது என்று கூறப்படுகிறது. உண்ணும் உணவிற்கு குறை வராது என்றால் அந்த உணவை வாங்கக் கூடிய அளவிற்கு பணவரவு வரும் என்றுதான் அர்த்தம். அப்படிப்பட்ட அன்னபூரணி தாயாரை பணம் ரீதியான பிரச்சனைகள் தீர்வதற்கு எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமாக திகழ்வது பணமே. நாம் கொடுத்த இடத்தில் இருந்து பணம் வராவிட்டாலும் பிரச்சினைதான். நாம் வாங்கிய இடத்தில் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்றாலும் பிரச்சினைதான். நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையில் பணம் என்பது இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு அன்னபூரணியை நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக இப்பொழுது நவராத்திரி நடக்கிறது, வளர்பிறையும் கூட, வளர்பிறையில் வரக்கூடிய செவ்வாய் கிழமையில் இந்த அன்னபூரணி வழிபாட்டை செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றே கூறலாம். ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசியின் நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் அன்னபூரணி தாயாரின் சிலையை வைக்க வேண்டும். அடுத்ததாக மஞ்சள் தூள் வேண்டும். இது நாம் விரலி மஞ்சள் அரைத்து பொடியாக தயார் செய்து அந்த பொடியை பயன்படுத்துவது என்பது மிகவும் நல்லது. இயலாத பட்சத்தில் கடையில் விற்கக்கூடிய மஞ்சள் தூளை கூட நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அன்னபூரணி சிலை கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். நாம் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் வடக்கு பார்த்தவர் அமர்ந்து கொண்டு அன்னபூரணி தாயாருக்கு இந்த மஞ்சளால் அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது அன்னபூரணி தாயாரின் மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 27 முறை கூறலாம் அதிகபட்சம் 108 முறை கூறலாம். இந்த வழிபாட்டை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதைவிட தொடர்ந்து 48 நாட்கள் செய்தோம் என்றால் அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். இப்படி அர்ச்சனை செய்து முடித்த பிறகு அன்னபூரணி தாயாரின் சிலை அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்.
மறுநாள் காலையில் அன்னபூரணி தாயாருக்கு அர்ச்சனை செய்த மஞ்சளை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு அந்த அரிசியில் இருந்து இரண்டு அரிசியை மட்டும் எடுத்து நம்முடைய தலையில் போட்டுக்கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் அரிசியை மாட்டு தொழுவத்தில் கொண்டு சென்று போட வேண்டும் அல்லது எறும்பு புற்று இருக்கும் இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக அன்னபூரணி தாயாரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்குரிய வழியை அன்னபூரணி தாயார் அருள் புரிவார். கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். பணம் ரீதியாக ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது.
மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம் க்லீம் அன்னபூர்ணாய நமஹ
இதையும் படிக்கலாமே:ஐஸ்வர்யம் பெருக புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
உண்ண உணவிற்கு குறைவு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அன்னபூரணி தாயாரை வழிபாடு செய்வதை விட பணரீதியான பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று வழிபாடு செய்தால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.