செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் குபேர பகவான். பெருமாளுக்கு பண நெருக்கடி வந்த பொழுது குபேர பகவான் தான் செல்வத்தை கொடுத்து உதவி செய்தார் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட குபேர பகவானுக்குரிய கிழமையாக திகழக்கூடிய வியாழக்கிழமை அன்று பௌர்ணமி வருவது என்பது சிறப்பு என்றால் பெருமாளுக்கு உரிய புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது இன்னும் அதிக பலனை தரக்கூடியதாக திகழ்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த குபேர பௌர்ணமியில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குபேர பௌர்ணமி பரிகாரம்
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி திதி மிகவும் சிறப்புக்குரிய திதியாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கு ஏற்றார் போல் அந்த திதிக்குரிய பலன் மாறுபடும். அதேபோல் தான் இந்த திதி வரக்கூடிய கிழமையை பொருத்தும் அதன் பலன்கள் மாறுபடும். அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திதி என்பது வியாழக்கிழமை வருகிறது, வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்குரிய கிழமையாக இருந்தாலும் மற்றொரு புறம் குபேர பகவானுக்குரிய கிழமையாகவும் கருதப்படுகிறது.
இவர்கள் இருவருமே செல்வ செழிப்பை அதிகரிக்க கூடியவர்களாகவே திகழ்கிறார்கள். அதனால் வியாழக்கிழமையில் வரக்கூடிய இந்த பௌர்ணமி மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அதுவும் புரட்டாசி மாதத்தின் கடைசி நாளில் வருகிறது என்பது கூடுதல் சிறப்பை தரக்கூடியதாக திகழ்கிறது. இந்த குபேர பௌர்ணமியில் குபேர பகவானுக்குரிய ஒரு பரிகாரத்தை நாம் செய்யும்பொழுது அந்த பரிகாரத்தின் பலனால் நம் வீட்டில் செல்வ செழிப்பு என்பது அதிகரிக்கும் என்றே கூறலாம்.
அந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவைப்படும் பொருட்கள் பச்சை நிற துணி, நெல் அல்லது பச்சரிசி, ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், சில்லறை நாணயங்கள. இந்த பரிகாரத்தை அக்டோபர் மாதம் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு செய்ய ஆரம்பிக்க வேண்டும். வீட்டில் குபேரரின் விளக்கு இருக்கும் பட்சத்தில் அந்த விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ளலாம். குபேரரின் சிலை அல்லது படம் இருந்தால் அதற்கு முன்பாக தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளலாம். அப்படி எதுவுமே இல்லை என்றால் சாதாரண ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபமேற்றி வைத்த அந்த தீபத்தில் குபேரர் இருப்பதாக மனதார நினைத்துக் கொள்ள வேண்டும். குபேர பகவானை மனதார நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
முதலில் பச்சை நிற துணியை விரித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெல்லை சேர்த்துக் கொள்ளுங்கள். நெல் கிடைக்காத பட்சத்தில் பச்சரிசியை வைக்க வேண்டும். அதற்கு மேல் ஏலக்காய் இரண்டு, கிராம்பு இரண்டு, பச்சை கற்பூரம் சிறிய துண்டு, சில்லறை காசுகள் மூன்றிலிருந்து ஐந்து என்ற எண்ணிக்கையில் வைத்து மூட்டையாக கட்டி, தீபத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். அரை மணி நேரம் இந்த மூட்டை அப்படியே பூஜை அறையில் குபேர தீபத்திற்கு முன்பாக இருக்கட்டும்.
பிறகு இந்த முடிச்சை எடுத்து வீட்டு சமையலறையில் மளிகை பொருட்கள் வைக்கும் இடத்தில் யாருக்கும் தெரியாத வண்ணம் வைத்து விட வேண்டும். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தில் இந்த மூட்டையை எடுத்து குபேர தீபத்திற்கு முன்பாக வைத்து சாம்பிராணி தூபம் காட்டிவிட்டு மறுபடியும் திரும்ப அதே இடத்தில் வைத்து விட வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த மூட்டையில் இருக்கக்கூடிய பொருட்களை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். நாணயங்களை எடுத்து பீரோவில் வைத்து விட வேண்டும். மறுபடியும் புதிதாக இந்த மூட்டையை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே:ஐப்பசி முதல் நாள் ஏற்ற வேண்டிய தீபம்
இந்த முறையில் நாம் பௌர்ணமி தினத்தில் குபேர பகவானுக்குரிய பரிகாரத்தை செய்வதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.