இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்களுக்கு என்று ஏதாவது ஒரு உணவு இருக்கும். அதனால் தான் அந்த உணவை படி அளக்கக்கூடிய தெய்வத்திற்கு நாம் நெய்வேத்தியம் என்ற பெயரில் ஏதாவது ஒரு உணவு பொருளை வைத்து வழிபாடு செய்கிறோம். இப்படி நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. தினமும் வீட்டில் வழிபாடு செய்பவர்கள் கூட தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருளை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்யும்பொழுது அதன் பலன் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் தேய்பிறை சஷ்டி அன்று முருகப்பெருமானுக்கு வைக்க வேண்டிய நெய்வேத்தியத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடும் செய்யும் முறை என்பது இருக்கிறது. அதுவும் அந்த தெய்வத்திற்குரிய நாளில் அந்த தெய்வத்திற்கு பிடித்த நெய்வேத்தியத்தை வைத்து நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வழிபாட்டின் முழு பலனையும் நம்மால் பெற முடியும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் முருகப் பெருமானுக்கு எந்த பொருள் மிகவும் பிடிக்கும் என்றும் அதை எப்படி நெய்வேத்தியமாக வைப்பதன் மூலம் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்றும் தான் பார்க்க போகிறோம்.
செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இயன்றவர்கள் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று ஒரே ஒரு நெய் தீபத்தையாவது ஏற்றி வைத்து செவ்வரளி மலர்களை கொடுத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. அதேபோல் வீட்டிலும் முருகப் பெருமானின் படத்தை சுத்தம் செய்து செவ்வரளி மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். செவ்வரளி மலர் கிடைக்காதவர்கள் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய எந்த மலர்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமானுக்கு என்று சில பொருட்களை நெய்வேத்தியமாக வைப்போம். அப்படி நெய்வேத்தியமாக வைத்து வழிபடக்கூடிய நேரம் மாலை 6:30 மணியாக இருப்பது மிகவும் நல்லது. மாலை 6:30 மணிக்கு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு சுத்தமான டம்ளரை எடுத்து அதில் சுத்தமான நீரை பிடித்து வைக்க வேண்டும். பிறகு பாயாசத்திற்கு உபயோகப்படுத்தும் உலர் திராட்சையை 9, 18, 27 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முருகப்பெருமானுக்கு முன்பாக இருக்கக்கூடிய சுத்தமான தண்ணீரில் ஒவ்வொரு உலர் திராட்சியாக போட வேண்டும். அப்படி போடும்பொழுது “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டே போட வேண்டும். இப்படி போட்டு முடித்த பிறகு நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூறி முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். வழிபாடு நிறைவு செய்த பிறகு இந்த தண்ணீரில் போட்ட உலர் திராட்சை எடுத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக தர வேண்டும். வெளிநபர்களுக்கு தரக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் நாம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நன்மைகள் நடைபெறும். கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நாம் என்ன வேண்டும் என்று வேண்டுதல் வைத்தோமோ அந்த வேண்டுதலும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கோவிலுக்கு சென்றும் மூலவரை தரிசிக்க முடியலையா?
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த ஒரு பொருளை முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்து முழு மனதோடு வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்குவதோடு நினைத்த காரியம் நினைத்தபடி நடை பெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.