ஒருவருடைய வாழ்க்கையில் சுபகாரியம் என்பது கண்டிப்பான முறையில் நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய வாழ்க்கை அடுத்த கட்ட நிலைக்கு முன்னேறிக்கொண்டே செல்ல முடியும். அந்த வகையில் அனைவருக்கும் நடக்க வேண்டிய ஒரு சுபகாரியமாக திகழ்வதுதான் திருமணம். எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி திருமணம் நடைபெறாமல் இருக்காது. அப்படிப்பட்ட திருமணம், குழந்தை பாக்கியம் இவற்றில் ஏதேனும் தடைகள் இருப்பின் அந்த தடைகளை நீக்குவதற்கு முருகப்பெருமானுக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுபகாரிய தடை நீக்கும் தீபம்
சுப நாள் என்று கூறக்கூடிய நாளாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அதனால் தான் வெள்ளிக்கிழமை அன்று வீடு மங்களகரமாக இருக்கும் என்றும், பூஜைகள் செய்வது, சாம்பிராணி தூபம் போடுவது போன்றவை அனைத்தும் நடைபெறும். அதனால் சுபகாரிய தடை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் விரைவிலேயே சுப காரியம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்களும் வெள்ளிக்கிழமை அன்று வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த முறை முருகப்பெருமானின் திருக்கல்யாணம் என்பது வெள்ளிக்கிழமை சேர்ந்து வருகிறது. அதனால் இன்றைய தினத்தில் இருந்து நாம் திருமணத்தடை நீங்குவதற்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும் வழிபாடு செய்தோம் என்றால் அதனுடைய பலன் விரைவிலேயே நமக்கு கிடைக்கும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் வள்ளி தெய்வானையோடு சேர்ந்திருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் வைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வ படம் இருக்கும் பட்சத்தில் குலதெய்வப்படத்தையும் அருகில் வைத்துக் கொள்ளலாம்.
அவர்களுக்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் வெற்றிலை கொட்டைப்பாக்கு, இரண்டு வாழைப்பழத்தை வைக்க வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக செய்து வைக்க வேண்டும். அடுத்ததாக புதிதாக ஒரு அகல் விளக்கை எடுத்துவைத்து அதில் நெய் ஊற்றி பஞ்ச திரி போட்டு தீபமேற்றி எந்த சுபகாரியம் தடைப்பட்டு இருக்கிறதோ அது நடைபெற வேண்டும் என்று முருகப்பெருமானிடம் ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ள வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 18 வெள்ளிக்கிழமைகள் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டாவது வாரம் தீபம் ஏற்றும் பொழுது இரண்டு தீபமாக ஏற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தீபத்தை அதிகரித்துக் கொண்டே சென்று தீபம் ஏற்ற வேண்டும். 18 வது வாரம் 18 தீபங்களை ஏற்றி முடித்த பிறகு நாம் நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு தர வேண்டும்.
இப்படி நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் அந்த 18 வாரம் நிறைவடைவதற்குள்ளாகவே எந்த சுபகாரியம் தடைப்பட்டு இருக்கிறதோ அது நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. இதில் நாம் முருகப்பெருமானுக்கு முன்பாக வைக்கக்கூடிய வெற்றிலை என்பது வாடக்கூடாது. பூஜை எல்லாம் நிறைவடைந்து பிறகு அந்த வெற்றிலை பாக்கை எடுத்து வெற்றிலை பாக்கு போடுபவர்களுக்கு தானமாக கொடுத்து விட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பசு மாட்டிற்கு தானமாக தர வேண்டும்.
இதையும் படிக்கலாமே:தோல்விகள் வெற்றிகளாக மாற கந்த சஷ்டி வழிபாடு
முழு மனதோடு முருகப்பெருமானை நம்பி வீட்டிலேயே இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் தடைகளாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி விரைவிலேயே சுப காரியம் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.