வெள்ளிக்கிழமை இரவு 8:22 மணிக்கு ஆரம்பித்து சனிக்கிழமை மாலை 6:30 மணி வரை அஷ்டமி திதி என்பது இருக்கிறது. சூரிய உதயத்தின் பொழுது என்ன திதி இருக்கிறதோ அந்த திதி தான் அன்றைய நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய திதி என்பதால் சனிக்கிழமை வரக்கூடிய அஷ்டமி திதியை நாம் சனி மகா அஷ்டமி என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட சனி மகா அஷ்டமி அன்று செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சனி மகா அஷ்டமி வழிபாடு
அஷ்டமி என்பது கால பைரவருக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. கால பைரவர் சனிபகவானின் ஆசானாக திகழ்கிறார். சனிபகவானுக்குரிய சனிக்கிழமை அன்று சனி பகவானின் ஆசானான கால பைரவருக்கு உகந்த அஷ்டமி திதி வருகிறது என்பது அதீத சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட அஷ்டமி திதி அன்று நாம் காலபைரவரை வழிபாடு செய்வதன் மூலம் பல நன்மைகள் நமக்கு ஏற்படும். இந்த நன்மைகள் அனைத்தையுமே நாம் பெறுவதற்கும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கவும், பிரச்சனைகள் தீரவும் வீட்டில் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
வளர்பிறை அஷ்டமி திதியில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு வீற்றிருக்கக் கூடிய கால பைரவரை ராகு காலத்தில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ராகு காலத்தை தவிர்த்து உச்சிக்கால பூஜையிலும் கலந்து கொள்வது நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நாம் பூஜையில் கலந்து கொள்ளும் பொழுது காலபைரவருக்கு உகந்த தாமரைப்பூ, வில்வ இலைகள், தும்பை பூ, செவ்வந்திப்பூ, சந்தன மாலை போன்றவற்றை வாங்கித் தருவதும் நல்ல பலனையே தரும்.
இந்த பரிகாரத்தை அஷ்டமி திதி நிறைவடைவதற்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு காலபைரவரை மனதார நினைத்துக் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தில் கால பைரவர் வீற்றிருப்பதாக மனதார உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த தீபத்திற்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை வைத்து அந்த தட்டின் மேல் கிழியாத நல்ல வெற்றிலையாக ஒரு வெற்றிலையை வைக்க வேண்டும். அடுத்ததாக ஏழு மிளகை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மிளகை ஒவ்வொன்றாக அந்த வெற்றிலையின் மீது வைக்க வேண்டும்.
அவ்வாறு வைக்கும் பொழுது “ஓம் கால பைரவா போற்றி” என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டே வைக்க வேண்டும். பிறகு உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறதோ, எந்த பிரச்சனைகள் தீர வேண்டுமோ அதை முழு மனதோடு தீபத்தை பார்த்தவாறு கால பைரவரை நினைத்துக் கொண்டு கூற வேண்டும். இப்படி கூறி முடித்துவிட்டு குறைந்தபட்சம் 20 நிமிடமாவது அந்த வெற்றிலை பூஜையறையிலேயே இருக்கட்டும்.
20 நிமிடம் கழித்து வெற்றிலைக்குள் இருக்கக்கூடிய அந்த மிளகை மூட்டையாக கட்டி, வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். வெற்றிலை வாடும் பொழுது வாடிய வெற்றிலையை மாற்றி புதிய வெற்றிலையை வைக்க வேண்டும். வேண்டுதல் எப்பொழுது நிறைபெறுகிறதோ அப்பொழுது இந்த மிளகை ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும். இந்த முறையில் நாம் மிளகை வைத்து பரிகாரம் செய்யும் பொழுது காலபைரவரின் அருளால் நம்முடைய தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. மேலும் தடைகள் விலகும், நினைத்தது நடக்கும், எதிரிகள் தொல்லை விலகும், தொழிலில் இருக்கக்கூடிய போட்டி, பொறாமைகள் முற்றிலும் நீங்கும், சனி பகவானின் தாக்கம் குறையும்.
இதையும் படிக்கலாமே:திடீர் பண நஷ்டம் வர காரணம்
பைரவருக்கு உகந்த மிளகை வைத்து இந்த முறையில் அஷ்டமி தினத்தில் பரிகாரம் செய்பவர்களுக்கு பைரவரின் அருளால் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.