வீட்டில் பணம் தங்குவதற்கு சில சூட்சமங்கள் உள்ளது. பணத்தை செலவு செய்யும் பொழுது இந்த விஷயத்தை மட்டும் செய்யவே வேண்டாம். இப்படி செய்வதால் பணமானது சுத்தமாக கையில் தங்குவது கிடையாது என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். பணம் சேர்ப்பதை விட, அதை செலவு செய்யும் பொழுது செய்யக்கூடாத சில விஷயங்கள் உண்டு. அதை பற்றிய சுவாரசியமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து அறிந்து கொள்வோம் வாருங்கள்.
ஒரு சிலர் எல்லாம் பணத்தை செலவு செய்யும் பொழுது ஒரு ரூபாய் கூட குறையாமல் கணக்கு எழுதி வைப்பார்கள், பார்த்ததுண்டா? குறிப்பாக இல்லத்தரசிகள் இதை செய்வார்கள். கணவன் கொடுக்கும் பணத்திலிருந்து ஒரு ரூபாய் செலவு செய்தாலும், அதற்கான செலவு கணக்கை எழுதி வைப்பார்கள். எவ்வளவு பணம் வரவாக வந்திருக்கிறது? எவ்வளவு பணத்தை அதிலிருந்து செலவு செய்திருக்கிறோம்? என்பது அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான் என்றாலும், அதை இப்படி கராராக எழுதுவது ரொம்பவும் எதிர்மறையான செயலாகும்.
பணத்தை செலவு செய்யும் பொழுது அதை கராராக கணக்கு வைத்து எழுதிக் கொண்டால், உங்களிடம் அது தங்கவே செய்யாது. நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அது அப்படியே கரைந்து போய் கொண்டே இருக்கும். பணம் கொஞ்சம் கூட கையில் சேரவே செய்யாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. பணத்தினுடைய சூட்சும விதியே, அதை செலவு செய்யும் பொழுது கணக்கு பார்க்காமல் செலவு செய்வது தான். அதுவும் நல்ல காரியங்களுக்காகவும், புண்ணிய காரியங்களுக்காகவும் செலவு செய்பவர்களிடத்தில் மேலும் மேலும் பணம் சேர்ந்து கொண்டே இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.
கஷ்டப்பட்டு நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை செலவு செய்யும் பொழுது முக்கியமான விஷயங்களை மட்டும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சீட்டு போடுகிறீர்கள் என்றால் எந்த மாதத்தில் ஆரம்பித்து? எவ்வளவு கட்டுகிறீர்கள்? என்று எழுதிக் கொள்ளலாம். பெரிய செலவுகளை எழுதிக் கொள்ளலாம். ஒருவர் கொடுக்க வேண்டிய பணத்தை பற்றிய தகவல்களை எழுதிக் கொள்ளலாம். நாம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கணக்கு வைத்து எழுதி கொடுக்கலாம்.
மொய் வைத்த வரவு, செலவு கணக்கை பற்றி கூட நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நோட்டு ஒன்றை போட்டு வைத்து அல்லது டைரியில் இன்றைக்கு கால் கிலோ தக்காளி வாங்கினேன்.. ஒரு ரூபாய்க்கு கடலை மிட்டாய் வாங்கினேன்.. என்றெல்லாம் எழுதி வைக்கக் கூடாது. இப்படி கஞ்சத்தனமாக எழுதி வைப்பவர்களுக்கு, அதே போல பணமும் கஞ்சத்தனம் செய்து தன் வேலையை காட்டும் என்பது சூட்சம உண்மையாகும். இப்படி செலவு செய்யும் பொழுது மனதிற்கும் திருப்தி ஏற்படுவது கிடையாது. அய்யோ!! இவ்வளவு செலவாகிறதே.. என்று கவலை தான் மிஞ்சும். இந்த கவலை தான் பணத்தை உங்களிடம் இருந்து விலக்கியே வைக்கிறது.
இதையும் படிக்கலாமே:
முருகனுக்கு அரோகரா சொல்வதன் காரணம்?
இப்படி எழுதி வைத்து பணம் கையில் நிற்காமல் செலவு செய்பவர்கள் நீங்களாக இருந்தால், உங்களுக்கு அனுபவ பூர்வமாகவே இது ஏற்கனவே நடந்தேறி இருக்கும். ஒருமுறை எல்லாவற்றையும் விட்டுவிட்டு செலவு செய்யும் பொழுது கணக்கு பார்க்காமல் மனதிருப்தியுடன் செலவு செய்து பாருங்கள். பிடித்ததை வாங்கி மகிழுங்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கும் எண்ணியதை வாங்கி கொடுத்து பரிசளியுங்கள். குழந்தைகளுக்கு தேவையானதை யோசிக்காமல் வாங்குங்கள். கோவில் கைங்கரியங்களுக்கு நூறோ, ஐநூறோ உங்களால் முடிந்த அளவிற்கு நன்கொடை கொடுங்கள். கண்டிப்பாக சிறு செலவை திட்டமிடாமல் செய்யுங்கள். மனமும் திருப்தி கொள்ளும், பணமும் சேரும் என்பது பணத்தின் விதியாகும்.