மழைக்காலம், குளிர்காலம், பனிக்காலம் என்றதுமே பலருக்கும் சளி பிரச்சனை என்பது ஏற்படும். குடும்பத்தில் ஒருவருக்கு சளி, இருமல் வந்துவிட்டால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய மற்ற நபர்களுக்கும் அது பரவி அனைவரையும் பாதிப்படைய செய்யும். அதில் இருந்து வெளியில் வருவதற்கு இயற்கையிலேயே உதவக்கூடிய ஒரு காய்கறியாக திகழ்வதுதான் வெண்டைக்காய்.
வெண்டைக்காயை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நன்மைகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் தீர்வதற்குரிய ஒரு வழியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வெண்டைக்காயை பலரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் சாப்பிடுவதற்கு வெண்டைக்காய் துவையலை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 1/4 கிலோ
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 5
பூண்டு – 5 பல்
புளி – சிறிதளவு
தக்காளி -1/4 பழம்
காய்ந்த மிளகாய் – 7
உப்பு – தேவையான அளவு
கடுகு உளுந்து – 1/4 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் சூடானதும் ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து, கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். இது இரண்டும் சிவந்த பிறகு இதில் சின்ன வெங்காயம், பூண்டு, புளி போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயமும் பூண்டும் வதங்கிய பிறகு அதில் தக்காளி, காய்ந்த மிளகாய் 4 இவற்றை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
திரும்பவும் அதே கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை அதில் சேர்த்து வெண்டைக்காயின் வழவழப்பு தன்மை நீங்கும் வரை நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதை அப்படியே எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். அது ஆரிய பிறகு இவை இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் மறுபடியும் கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு உளுந்து 1/4 டீஸ்பூன் போட்டு காய்ந்த மிளகாய் மூன்று போட்டு கடுகு உளுந்து பொறிந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் வெண்டைக்காய் விழுதை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெண்டைக்காய் விழுதின் நிறம் மாறி எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை குறைந்த தீர்வை வைத்து வதக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து விட்டால் போதும் வெண்டைக்காய் துவையல் தயாராகி விட்டது. இதை ஒரு வாரம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கும் தொட்டுக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:5 மினிட்ஸ் மெது போண்டா ரெசிபி
வெண்டைக்காய் சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எப்பொழுதும் போல் வெண்டைக்காயை செய்து தராமல் இப்படி துவையலாக செய்து தரும் பொழுது அது வெண்டைக்காய் துவையல் என்று தெரியாமலேயே விரும்பி சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன்.