- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கிராமத்து சுவையில் சுண்டைக்காய் துவையல் செய்முறை

கிராமத்து சுவையில் சுண்டைக்காய் துவையல் செய்முறை

- Advertisement -

பல அற்புதமான சத்துக்கள் நிறைந்த நாட்டு காய்கறிகளை நம்முடைய உணவில் நாம் அதிக அளவில் சேர்ப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் என்பது மேம்படும். அதிலும் அறுசுவைகளில் ஒன்றாக திகழக்கூடிய கசப்பு சுவையை நாம் அதிகளவில் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. அந்த கசப்பு சுவை மிகுந்த பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் சுண்டைக்காய். சுண்டைக்காயை நாம் நம்முடைய உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகரிக்கும். அதோடு வயிற்றில் இருக்கக்கூடிய புழுக்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இதை யாரும் அந்த அளவிற்கு விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் இதன் சுவையே. இதன் இயற்கையான சுவையே தெரியாத அளவிற்கு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் கிராமத்து சுவையில் சுண்டைக்காய் துவையலை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

சுண்டைக்காய் – 100 கிராம்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உளுந்து – 1/4 கப்,
பூண்டு – 2 பல்,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் – 10,
உப்பு – தேவையான அளவு,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 1/4 கப்

செய்முறை

முதலில் சுண்டைக்காயை வாங்கி வந்து அதன் காம்புகளை நீக்கிவிட்டு இரண்டாக நறுக்கி தண்ணீருக்குள் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் முதலில் 1/2 டீஸ்பூன் அளவு மட்டும் எண்ணெய் ஊற்ற வேண்டும். அந்த எண்ணெயில் உளுந்தம் பருப்பை சேர்த்து வறுக்க ஆரம்பிக்க வேண்டும். பிறகு அதில் பூண்டு, காய்ந்த மிளகாய், புளி இவற்றையும் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவை அனைத்தும் நன்றாக சிவந்து வறுபட்ட பிறகு அதை எடுத்து ஒரு தட்டில் போட்டு நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக மறுபடியும் அதே கடாயை அடுப்பில் வைத்து மீதம் இருக்கக்கூடிய எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் சுண்டைக்காயை சேர்த்து நன்றாக குறைந்த தீயில் வைத்து வதக்க வேண்டும். அந்த எண்ணெயிலேயே சுண்டைக்காய் நன்றாக வெந்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சுண்டைக்காய் நன்றாக வெந்த பிறகு அதையும் எடுத்து தனியாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் முதலில் நாம் வறுத்து வைத்திருந்த உளுந்து, காய்ந்த மிளகாய், புளி, பூண்டு இவற்றை சேர்த்து கொரகொரப்பாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் சீரகம், தேங்காய் துருவல் மற்றும் நாம் வதக்கி வைத்திருக்கும் சுண்டைக்காய், தேவையான அளவு உப்பு இவற்றையும் சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒருவேளை இதை சட்னியாக உபயோகப்படுத்துவதாக இருக்கும் பட்சத்தில் அதிக அளவில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இதில் நாம் தேங்காய் சேர்க்காமல் செய்யலாம். அப்படி சேர்க்காமல் செய்யும் பட்சத்தில் இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் இது கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்து ருசியில் சுண்டைக்காய் துவையல் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே:முட்டைக்கோஸ் வடை ரெசிபி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இரும்புச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கை கொடுத்த அற்புதமான இந்த சுண்டைக்காயை வாரத்திற்கு ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும் இரும்புச் சத்தும் நிரம்ப கிடைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

சற்று முன்