தை மாதத்தில் வரக்கூடிய சியாமளா நவராத்திரியில் நாம் ராஜ மாதங்கி தேவியை வழிபாடு செய்கிறோம். இவள் லலிதாம்பிகையின் மந்திரியாக திகழக்கூடியவள். ராஜமாதங்கியை சரஸ்வதி தேவியின் மறு அவதாரம் என்றே கூறலாம். ராஜ மாதங்கியை நாம் சியாமளா நவராத்திரியின் முதல் நாள் அன்று எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சியாமளா நவராத்திரி முதல் நாள் வழிபாடு
இந்த நவராத்திரியில் கொலுவைத்து வணங்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. வீட்டில் கலசம் வைத்தும் வழிபாடு செய்யலாம். தாம்பாளம் வைத்தும் வழிபாடு செய்யலாம். இவை இரண்டும் வைக்க இயலாது என்று நினைப்பவர்கள் மஞ்சளில் பிள்ளையார் பிடிப்பது போல் பிடித்து வைத்து அதை ராஜ மாதங்கியாகவே நினைத்து வழிபாடு செய்யலாம். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் ராஜ மாதங்கியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ராஜமாதங்கியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டால் சிறந்த புத்தி கூர்மை கிடைக்கும், ஞானம் கிடைக்கும். நம்முடைய வாழ்க்கையில் பெயரும் புகழும் செல்வ செழிப்பும் உயரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ராஜ மாதங்கிக்குரிய நவராத்திரியின் முதல் நாள் அன்று எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை மாலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். மாலை 6:00 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை செய்து கொள்ளலாம். கலசம் வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி, தாம்பாளம் வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி, அல்லது மஞ்சள் அம்மனை பிடித்து வைத்து வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல், பச்சை பயிறு சுண்டல் இவற்றில் ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். அடுத்ததாக ராஜ மாதங்கிக்கு அர்ச்சனை செய்வதற்காக ஜாதிமல்லி அல்லது மருதாணி இலை அல்லது இவை இரண்டையும் ஒன்றையும் சேர்த்தும் செய்யலாம். ராஜமாதங்கியின் இந்த மந்திரத்தை கூறி 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு லலிதா சகஸ்ரநாமம் தெரிந்தவர்கள் அதை பாராயணம் செய்யலாம். அபிராமி அந்தாதி தெரிந்தவர்கள் அதை பாராயணம் செய்யலாம் அல்லது கைபேசியில் ஒலிக்க விட்டு கேட்கலாம்.
பிறகு கற்பூர தீப தூப ஆராதனை அனைத்தும் காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு பிரசாதமாக வைத்த பொருட்களை முதலில் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு பிறகு பெரியவர்கள் சாப்பிட வேண்டும்.
மந்திரம்
“ஓம் க்லீம் ஸ்ரீ ராஜ மாதங்கி தேவியே நமஹ”
இதையும் படிக்கலாமே:ராஜயோகம் கிடைக்க தை அமாவாசை வழிபாடு
புத்தி கூர்மையுடனும் பேரும் புகழுடனும் செல்வ செழிப்புடனும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும் அல்லது தங்களுடைய பிள்ளைகள் வாழ இந்த சியாமளா நவராத்திரியில் ஸ்ரீ ராஜமாதங்கி தேவியை வழிபாடு செய்து அனைத்தையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.