கடனால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெளியே வர முடியாமல் எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் விரைவிலேயே நம்முடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்றுதான் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அந்த முயற்சிகள் வெற்றி அடைவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட்டால் கடன் பிரச்சினை தீரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
கடன் நிவர்த்தி அடைய முருகன் வழிபாடு
கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்கு அதிதேவதையாக திகழக் கூடியவர் முருகப்பெருமான். அதனால் ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். அதிலும் குறிப்பாக சொந்த வீடு அமைவது, கடன் பிரச்சினை தீருவது போன்றவற்றிற்கு மிகவும் சிறப்பு மிகுந்த வழிபாடாக செவ்வாய்க்கிழமை வழிபாடு திகழ்கிறது. அந்த வழிபாடுகளில் மிகவும் சிறப்பு மிகுந்த ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டிற்கு செவ்வாய் பகவானுக்கு உகந்த சில பொருட்கள் நமக்கு வேண்டும். முதலில் செவ்வாய் பகவானுக்குரிய சிவப்பு நிற துணியை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசியை வைத்துக் கொள்ளுங்கள். தங்களால் எவ்வளவு பச்சரிசியை வைக்க முடியுமோ அவ்வளவு வைத்துக் கொள்ளலாம். பிறகு அதில் சிவப்பு நிற மலர்களை வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக சிவப்பு நிற ரோஜாக்களை வைப்பது நல்லது. அடுத்ததாக இதில் அச்சு வெல்லத்தை வைக்க வேண்டும். இதற்கும் எந்தவித அளவும் கிடையாது. தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.
செவ்வாய்க்கிழமை சூரிய உதயம் ஆவதற்கு முன்பாக அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு இந்த மூட்டையை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பு ஆலயம் திறந்திருக்காது என்பவர்கள் அன்று காலை 8:00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து விட வேண்டும். நேராக முருகப்பெருமான் சன்னதிக்கு சென்று உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களின் பெயரையும் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு முருகப்பெருமானை இந்த மூட்டையை கையில் வைத்துக் கொண்டு ஆறு முறை வலம் வர வேண்டும். வலம் வந்த பிறகு அந்த ஆலயத்திலேயே ஒரு இடத்தில் அமர்ந்து அந்த மூட்டையை கையில் வைத்துக்கொண்டு உங்களுக்கு என்னென்ன கடன் பிரச்சனை இருக்கிறதோ அவை அனைத்தையும் முருகப்பெருமானிடம் கூறுவது போல் கூறி அவை அனைத்தும் நீங்க வேண்டும், நிவர்த்தி அடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த மூட்டையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் ஓடுகின்ற நீர் இருக்கும் பட்சத்தில் அந்த நீரில் போட்டு விட வேண்டும். ஓடுகிற நீர் இல்லை என்பவர்கள் ஆலயத்திலேயே இருக்கக்கூடிய ஏதாவது ஒரு மரத்தின் அடியில் இந்த மூட்டையை வைத்து விட்டு வர வேண்டும். இப்படி தொடர்ச்சியாக நான்கு வாரங்கள் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுக்கு அவர்களுடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழி கிடைக்கும். கடன் பிரச்சினை தீருவதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகளும் வெற்றி அடையும்.
இதையும் படிக்கலாமே:3-3-2025 தேவதை நாள்
எளிமையாக செய்யக்கூடிய இந்த வழிபாட்டை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் முருகப் பெருமானின் அருளால் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட கடன் அனைத்தும் நீங்கி சிறப்பான வாழ்க்கையை பெறுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.