சொந்த வீடு கட்டுவது என்பது ஒவ்வொருவரின் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. நமக்கென ஒரு சொந்த வீடு இருந்து விட்டால் போதும் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து விடலாம் என்கிற தன்னம்பிக்கை பிறக்கும். இந்த சொந்த வீடு கனவு நினைவாகும் பொழுது திடீரென தடைகள் ஏற்படுவது உண்டு. வீடு கட்டும் பொழுது இத்தடைகள் வராமல் இருக்க அந்த ஊரில் இருக்கக்கூடிய எல்லை தெய்வத்திற்கு என்ன செய்ய வேண்டும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து இப்பதிவில் காண இருக்கிறோம்.
ஆசை ஆசையாய் வீடு கட்டுவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்ட பின்னர், நீங்கள் எந்த இடத்தில் வீடு கட்ட இருக்கிறீர்களோ, அந்த இடத்தின் அதாவது அந்த ஊரின் எல்லை தெய்வத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. எல்லை தெய்வத்தின் அனுமதி இருந்தால் வீடு கட்டுவதில் தடைகளும், சிக்கல்களும் வராமல் அந்த தெய்வம் பார்த்துக் கொள்ளுமாம்.
ஒவ்வொரு ஊருக்கும் எல்லை தெய்வம் இருக்கும். நகரில் இருப்பவர்களுக்கும் அந்த ஊருக்கு என தனிப்பட்ட கோவில்களும், தெய்வமும் இருக்கும். அதை எல்லையை காக்கும் தெய்வமாக வணங்கலாம். குறிப்பிட்ட அந்த எல்லையை காவல் காக்கும் தெய்வமாக அமைந்திருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். நீங்கள் வீடு கட்ட வாங்கி வைத்திருக்கும் செங்கல்லில் இருந்து ஒரு செங்கலை எடுத்துக் கொள்ளுங்கள்.
பூமி பூஜை எல்லாம் போட்டு முடித்த பிறகு இதை செய்யுங்கள். பொதுவாக பூமி பூஜை போடும் வரை எந்த பிரச்சினையும் வருவதில்லை, பூமி பூஜை போட்டு விட்டாலே, வீடு கட்டுவதில் சில தடைகள் வருவதை பார்த்திருக்கிறோம். அந்த தடைகள் வராமல் இருக்க, எல்லை தெய்வத்திடம் சென்று ஒரு செங்கல்லை வைத்து அந்த தெய்வத்திற்கு உரிய பூஜைகளை செய்யுங்கள். பொங்கல் வைத்து வழிபடலாம் என்றால், பொங்கல் வையுங்கள். வேறு எந்த வழிபாடு முறை இருக்கிறது? என்பதை அறிந்து கொண்டு, அந்த தெய்வத்தின் வழிபாட்டினை செய்து பூஜித்த பிறகு அந்த செங்கல்லை எடுத்துக் கொண்டு வாருங்கள்.
வீடு கட்டும் பொழுது அஸ்திவாரம் போடும் சமயத்தில் ஈசானிய மூலையில் நீங்கள் அந்த கல்லை வைத்து மூடி கட்டிடம் எழுப்ப வேண்டும். இப்படி எல்லை தெய்வத்தின் அருளோடும், அனுமதியோடும் நீங்கள் உங்கள் இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் எப்பேர்பட்ட தடைகளும் தகர்த்து எறிந்து உங்கள் கனவினை முழுமையாக பூர்த்தி செய்யலாம் என்பது பழங்கால நம்பிக்கை ஆகும்.
இதையும் படிக்கலாமே:
வீடு கட்டுவது சாதாரண விஷயம் அல்ல! “கல்யாணத்தை பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார்” என்று சும்மா யாரும் சொல்லவில்லை. அரும்பாடு பட்டு எழுப்பும் கட்டிடத்தை பாதியிலேயே நிறுத்தப்படுவது, பெரும் மனவேதனையை தரும். சிலருக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் கூட வரக்கூடும். பணரீதியான பிரச்சனைகள், குடும்ப தகராறுகள், சொத்து தகராறுகள் என்று செய்யும் பணி முடங்கிவிடும். இப்படி எந்த தடைகளும் இல்லாமல், நீங்கள் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க, உங்களுக்கென சொந்தமாக வீடு விருப்பப்படி அமைத்துக் கொள்ள ஊர் எல்லை தெய்வத்தின் வழிபாட்டினை செய்து ஆரம்பிங்கள், நல்லதே நடக்கும். அதுபோல இடம் வாங்கி வைத்து வீடு கட்ட முடியவில்லை என்பவர்களும், எல்லை தெய்வத்திடம் புதிய செங்கல் வாங்கி வைத்து வழிபாடு செய்து, நீங்கள் அந்த இடத்தில் பூமியை தோண்டி புதைத்து வையுங்கள். சீக்கிரமே வீடு கட்ட தெய்வம் அருள் புரியும்.