சாதாரண புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்றவற்றை கூட ஸ்பெஷலாக மாற்றுவது பழங்காலத்தில் தான். வாழை இலையில், செய்து வைத்த சாதத்தை வைத்து ஒரு நியூஸ் பேப்பரில் அழகாக மடித்துக் கொடுப்பார்கள். திறந்து சாப்பிடும் பொழுதே அதன் சுவையும், மணமும் நிறைவாக இருக்கும். ஊருக்கு அல்லது வெளியில் கிளம்பினாலே இது போல தயார் செய்து எடுத்துக் கொண்டு போவார்கள். பாட்டி காலத்து எலுமிச்சை சாத ரெசிபி எப்படி நாமும் தயார் செய்வது? என்னும் சமையல் குறிப்பு ரகசியத்தை தான் தொடர்ந்து இப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.
எலுமிச்சை சாதம் செய்ய தேவையான பொருட்கள் :
அரைக்க :
இஞ்சி – ரெண்டு இன்ச்
பூண்டு – ரெண்டு பல்
பச்சை மிளகாய் – இரண்டு
வரமிளகாய் – இரண்டு
சின்ன வெங்காயம் – நான்கு
கருவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
தாளிக்க :
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை – நாலு ஸ்பூன்
முந்திரிப் பருப்புகள் – தேவைக்கேற்ப
கருவேப்பிலை – ஒரு கொத்து
வரமிளகாய் – ஒன்று
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ரெண்டு சிட்டிகை
எலுமிச்சை பழம் – மூன்று
சாதம் அளவு :
250 கிராம் ஒரு ஆழாக்கு அரிசியில் தேவையான அளவிற்கு உப்பு போட்டு வடித்த சாதம் சரியாக இருக்கும்.
எலுமிச்சை சாதம் செய்முறை விளக்கம் :
ஒரு ஆழாக்கு அரிசியை வேக வைத்து உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸர் ஜாரில் தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய், சின்ன வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள்.
தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்கும் பொழுதே வறுத்த வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் தாளிக்க ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு, ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள்.
இவை நன்கு வறுபட்டதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி விடுங்கள். அவ்வளவுதான் இப்பொழுது அடுப்பை அணைத்ததும் மூன்று எலுமிச்சை பழங்களை பிழிந்து கிடைக்கும் சாற்றினை சேர்க்க வேண்டும். ஒருமுறை நன்கு கலந்து விட்டு அப்படியே வையுங்கள்.
இதையும் படிக்கலாமே:
பங்குனி முதல் நாள் பெருமாள் வழிபாடு
பின்பு நீங்கள் வடித்து வைத்துள்ள சாதம் லேசாக ஆறிய பின்பு இந்த கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி தழையை தூவி ஒரு பிரட்டு பிரட்டி அப்படியே சரிசமமாக அழுத்தி வையுங்கள். 2 மணி நேரம் கழித்து சாப்பிட்டு பாருங்கள், ருசி அபாரமாக இருக்கும். பொதுவாகவே கலவை சாதங்கள் தயார் செய்து 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கழித்து சாப்பிடும் பொழுது தான் அது சாப்பாட்டுடன் நன்கு ஊறி போய் ருசிக்கும். அடுப்பை அணைத்தபின் எழுமிச்சை சாறை சேர்ப்பது, முதலில் அரைத்த அந்த கலவை தான் இந்த சாப்பாட்டை ஸ்பெஷல் ஆக்கும், ட்ரை பண்ணி பாருங்க.