நம்முடைய சக்திக்கு மீறி கடவுள் எப்போதுமே நமக்கு கஷ்டங்களை கொடுக்க மாட்டார் என்று சொல்லுவாங்க. ஆனால் இன்றைய சூழ்நிலையில் வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் மனிதர்களால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக தான் இருக்கிறது. இதுதான் கலியுகம் போல. இந்த கலியுகத்தில் பைரவரது பாதங்களை இறுக்கப்பற்றிக் கொள்ளுங்கள். காலத்தால் கொடுக்கப்படக்கூடிய, தாங்க முடியாத கஷ்டங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகி செல்லும்.
அதிலும் இன்று காலபைரவருக்கு மிகவும் உகந்த சக்தி வாய்ந்த தேய்பிறை அஷ்டமி திதி. சனிக்கிழமை அன்று இந்த அஷ்டமி திதி வந்திருப்பது இரட்டிப்பு சிறப்பு. இந்த அஷ்டமி திதியை ‘சனி மஹா அஷ்டமி திதி’ என்று சொல்லுவார்கள். சனி பகவானுக்கு, குருவாக இருப்பவர் கால பைரவர். ஆகவே சனி தோஷம் உள்ளவர்கள், ஏழரை சனி நடப்பவர்கள், எல்லாம் இன்றைய தினம் கட்டாயமாக கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் மூலம் நட்சத்திரம், அஸ்வினி நட்சத்திரம், மகம் நட்சத்திரம், கேது திசை நடப்பவர்கள், கேது புத்தி நடப்பவர்கள் எல்லாம் இன்றைய தினம் கால பைரவரை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டும்தான் இன்று காலபைரவரை வழிபாடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. எல்லோருமே இன்றைய தினம் கால பைரவரை வழிபாடு செய்யலாம். கண்கலங்க வைக்கும் கஷ்டம். அனைத்தும் உங்களை விட்டு நீங்கும். எதிரி தொல்லை நீங்கும். கண் திருஷ்டி விலகும். எல்லா நன்மைகளும் உங்களை வந்து அடையும்.
தேய்பிறை அஷ்டமி பரிகாரம்
சரி இன்றைய தினம் சிறப்பாக கால பைரவரை எப்படி வழிபாடு செய்யலாம். அதிலும் குறிப்பாக இந்த கடன் தொல்லையில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் காலபைரவரை இன்றைய தினம் எப்படி வழிபாடு செய்வது. என்ன பரிகாரம் செய்வது.
பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். காலபைரவரை மனதார நினைத்து ஒரு வெற்றிலையில் 7 மிளகு வைக்க வேண்டும். ஒவ்வொரு மிளகாக வெற்றிலையில் வைக்கும் போது, “ஓம் கால பைரவரே துணை” என்று சொல்ல வேண்டும். (ஏழு முறை மந்திரத்தை சொல்ல வேண்டும். ஒவ்வொரு மிளகு வைக்கும் போதும் ஒவ்வொரு முறை மந்திரத்தை சொல்லுங்கள். ஏழு மிளகு, ஏழு முறை மந்திரம்).
பிறகு, அந்த வெற்றிலையில் வைத்திருக்கும் மிளகை சுருட்டி, ஒரு நூல் போட்டு, கட்டி, உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, பைரவரிடம் உங்களுடைய பிரார்த்தனையை வையுங்கள். ஒரே ஒரு பிரார்த்தனையாக இருக்கட்டும். பிறகு அந்த வெற்றிலை மூட்டையை பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து விடுங்கள். வழக்கம் போல ஒரு கற்பூர ஆராத்தி காண்பித்து, உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருந்தபடியே இன்றைய தினம், இந்த பரிகாரத்தை செய்யவும்.
இரண்டு நாளுக்கு ஒருமுறை வாடிய வெற்றிலையில் இருந்து மிளகை எடுத்து, புது வெற்றிலையில் வைத்து சுருட்டி நூல் போட்டு கட்டி பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். அடுத்து தேய்பிறை அஷ்டமி திதி வருவதற்குள், நீங்கள் என்ன வேண்டுதல் வைத்தீர்களோ, அதை அந்த காலபைரவர் தீர்த்து வைப்பார்.
கடன் தொல்லை நீங்க வேண்டும், எதிரி தொல்லை நீங்க வேண்டும், ஏவல் பில்லி சூனியம் விலக வேண்டும் என்று, என்ன பிரார்த்தனை வைக்க வேண்டும் என்றாலும், இந்த வெற்றிலை மிளகு பரிகாரத்தை இன்று நீங்கள் செய்யலாம். சனிக்கிழமையோடு வந்திருப்பதால் இந்த நாளுக்கு அதிக அற்புதம் வாய்ந்த பலன் இருக்கிறது.
இதையும் படிக்கலாமே: தொழிலில் வெற்றிகள் பெருக அஷ்டமி வழிபாடு
இன்று நள்ளிரவு 1:21 மணி வரை அஷ்டமி திதி இருக்கிறது. ஆகவே இன்று இரவு 11 மணிக்கு முன்பு எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும், இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு நல்லதை மட்டுமே செய்யும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.