புதிதாக வீட்டு மனை வாங்க விரும்புபவர்கள் அல்லது புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சீக்கிரமே தங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு செல்ல வேண்டிய கோவில் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரம் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
புதிதாக எப்படியாவது வீடு கட்ட வேண்டும் என்று நிறையவே கனவுகளோடு காத்திருப்பவர்கள் தான் நம்மில் ஏராளம். நமக்கென தனி வீடு சின்னதாக இருந்தாலும் போதும் என்று ஏக்கத்துடன் உழைப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம். நம் உழைப்பால் சிறுக சிறுக சேமித்த பணத்தில் புது வீடு கட்டுவதற்கு அல்லது மனை வாங்குவதற்கு எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் தெரியுமா?
சென்னை திருவெற்றியூரில் இருக்கும் “வடகுருதலம்” என போற்றப்படும் தெட்சிணாமூர்த்தி சுவாமி திருக்கோயில் நம் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றி தரும் அற்புத ஸ்தலமாக இருக்கிறது. புது வீடு கட்டுவதற்கு, கல்வி கலைகளில் சிறந்து விளங்குவதற்கு, திருமணத்தடை நீங்குவதற்கு இந்த ஸ்தலத்தில் பரிகாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக கோவில்களில் தெட்சிணாமூர்த்தி தெற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பார். இந்த கோவிலில் விசேஷமாக குருவிற்கு உகந்த வடக்கு திசையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு குரு தெட்சிணாமூர்த்தியாக அருள் பாலிக்கிறார். தெட்சிணாமூர்த்திக்கு என தனிக்கோவில் இருப்பது இங்கு மிகவும் விசேஷமானது.
ஒரு கையில் அக்னியும், மறு கையில் நாகத்தையும் கொண்டு அவரின் கீழே 18 மகரிஷிகள் சீடர்களாக வீற்றிருக்க அற்புதமாக காட்சி தருகிறார். ஸ்தல புராணத்தின்படி சித்தர் ஒருவர் வேத பாடசாலை அமைத்து சிஷ்யர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். பிறகு அந்த இடத்திலேயே வேதத்தின் அம்சமாக திகழும் தெட்சிணாமூர்த்திக்கு கோவில் எழுப்பி உள்ளதாக புராணங்கள் கூறுகிறது. குபேரனுக்கு உகந்த வடக்கு திசையில் தெட்சிணாமூர்த்தி காட்சி தருவதால், இவரிடம் வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
புது வீடு கட்டுவதற்கு கோவில் வளாகத்தில் கற்களை அடுக்கி வைத்து வேண்டுவது பக்தர்களுடைய நம்பிக்கை. இந்த கோவிலுக்கு வந்து மனதார பிரார்த்தனை செய்து கொண்டு தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலையால் மாலை கோர்த்து அணிவிக்க வேண்டும். பின்னர் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, சொந்த வீடு புதிதாக கட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்க வேண்டும். இப்படி செய்தால் உடனே புது வீடு கட்டி குடியேறுவார்கள் என்பது அசைக்க முடியாத பக்தர்களின் நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே:
12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரம்
பிரார்த்தனை வேண்டுதல் நிறைவேறிய பின்பு மீண்டும் கோவிலுக்கு வந்து தெட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து பால் மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். அது போல திருமண தடை உள்ளவர்கள் தெட்சிணாமூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு கால வேளையில் எலுமிச்சையில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி எலுமிச்சை தீபம் போட்டு வழிபடுவார்கள். பின் பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேக, ஆராதனைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கலை, கல்வி, இசை, இலக்கியம் என்று யாவற்றிலும் சிறந்து விளங்க இவரை தவறாது வழிபட்டு எல்லோரும் பயனடையலாம்.