உலக உயிர்கள் அனைத்தும் பசியாற அன்னம் கொடுப்பது அன்னபூரணி தேவி! இந்த உணவினை கொடுத்த அன்னபூரணியை அவமதித்தால், அன்னதோஷம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அரிசியில் அன்னபூரணி வாசம் செய்கிறார். அரிசி பானையில் அரிசியுடன் எப்பொழுதும், அரிசி ஆழாக்கும் (அதாவது அரிசி அளக்கும் படி) சேர்ந்து இருக்க வேண்டும். இப்படி சாஸ்திர ரீதியாக சாதம் வடிக்கும் முறை பற்றிய சுவாரசியம் நிறைந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் பகிர்ந்து கொள்ள போகிறோம்.
அரிசி பெட்டியில் எப்பொழுதும் அரிசி அளக்கும் அளவை படி இருக்க வேண்டும். அதில் அரிசி இல்லாமல் இருக்கக்கூடாது. சாதம் வடிக்க அரிசியை கழுவ எடுத்த பின்பு, மீண்டும் அரிசியை நிரப்பி அளவையை அதனுள் வைக்க வேண்டும். இதனால் குறையாத, வறுமையில்லாத உணவு கிட்டும் என்பது நம்பிக்கை. உலை கொதித்த பின்பு தான் அரிசியை போட வேண்டும், அரிசியுடன் சேர்த்து, தண்ணீரை ஊற்றி சாதம் வடிக்கக்கூடாது. சாதம் வைக்க உலை கொதிக்கும் சமயத்தில், அரிசியை போடும் பொழுது சிறிதளவு வாயில் போட்டுக் கொள்வார்கள். இது போல செய்யக்கூடாது.
பாத்திரத்தை இடது கையால் பிடித்துக் கொண்டு, வலது கையால் தான் அரிசியை போட வேண்டும். உலை கொதித்து அரிசி வெளியில் வந்து விழக்கூடாது. அடுப்பை சரியான அளவில் வைக்க வேண்டும். நெருப்பில் அந்த அரிசி பட்டு விட்டால் தோஷம் உண்டாகும். அரிசி போடும் பொழுது, கீழே வரும் இந்த அன்னபூரணி தேவியின் மந்திரத்தை சொல்லிக் கொண்டே போட்டால், அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
அன்னபூரணி மந்திரம்:
ஓம் சர்வ ஜீவன்ய ச போஜனாய வித்மஹே,
கௌரி ரக்ஷாய தீமஹி,
தன்னோ அன்னப்பூரணி ப்ரசோதயாத்!!!
சாதம் சரியாக வேகாமலும் இருக்கக் கூடாது, நன்கு வெந்து குழைந்திருக்கவும் கூடாது. சரியான பதத்தில் சாதம் வடிக்கும் இல்லத்தில், கடன் தொல்லைகள் இருக்காது. பண ரீதியான பிரச்சினைகளும் வராது. சாதம் வெந்து கொண்டிருக்கும் பொழுது மகாலட்சுமியின் அம்சம் நிரம்பிய, கல் உப்பை சிறிதளவு சேர்க்க வேண்டும். சிலர் உப்பு போடாமல் சாதம் வடிப்பது உண்டு. சிலர் உப்பு சேர்க்காமல் சாதம் வடிக்க மாட்டார்கள். சாஸ்திர ரீதியாக உப்பு சேர்த்து சாதம் வடிப்பது நல்லது. இதனால் மகாலட்சுமி மற்றும் அன்னபூரணி அருளோடு அந்த சாப்பாடு ரொம்பவே ருசியாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:
வீட்டில் கெட்ட சக்தி விலக வியாழக்கிழமை சாம்பிராணி தூப பரிகாரம்
சாப்பாடு போடும் சமயத்தில், பெண்கள் அழுது கொண்டே சமைக்கக்கூடாது. மலர்ந்த முகத்துடன், எல்லோருக்கும் வயிறார உணவு பரிமாற வேண்டும் என்கிற நல்ல தூய்மையான எண்ணத்துடன் சாதம் செய்து பாருங்கள், உங்கள் சாப்பாடு எப்படி செய்தாலும் அது ருசிக்கும். கோபங்களுக்கும், ஆத்திரங்களுக்கும் சமையல் கட்டில் வேலை கொடுக்காதீர்கள். சாதம் வடிக்கும் பொழுது அதன் கஞ்சி தண்ணீர் கீழே சிந்தக்கூடாது. இந்த தண்ணீரில் நிறைய சத்துக்கள் உள்ளது. இதனை வீணாக்கினாலும் தோஷங்கள் வரும், எனவே வீணாக்காமல் மற்ற ஜீவராசிகளை பசியாற்றுங்கள். இதன் மூலம் உங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைக்கும். அன்னத்தை வீணாக்க கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல நம் வீட்டில் செல்வங்களும், தன தானியங்களும் பஞ்சமில்லாமல் நிறைந்து இருக்க, இந்த விஷயங்களை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.