வைகாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை என்பது மிகவும் விசேஷமான ஒன்று என்று கூறப்படுகிறது. மேலும் அன்றைய நாளில்தான் சனிஸ்வர பகவான் ஜெயந்தியும் வருகிறது என்பதால் அதற்கு கூடுதல் சிறப்புகள் உண்டு. சனீஸ்வர பகவான் அரச மரத்தடியில் முழுமையாக நிறைந்திருக்கிறார் என்று புராணங்கள் கூறுவதால் வைகாசி அமாவாசை அன்று அரச மர வழிபாட்டை நாம் மேற்கொள்வதன் மூலம் சனீஸ்வர பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் நீங்கி சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். அந்த அரச மர வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அஸ்வத்த பிரதக்ஷணம் செய்யும் முறை
மரங்களின் ராஜா என்று கூறப்படுவது அரசமரம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட அரச மரத்தடியில் தான் பல இடங்களிலும் பிள்ளையார் வீற்றிருக்கிறார். அரச மர பிள்ளையாரை வழிபாடு செய்பவர்களுக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அரச மரத்தை நாம் வழிபாடு செய்வதன் மூலம் ஆன்மீக ரீதியாக நன்மைகள் ஏற்படுவதைப் போலவே அறிவியல் ரீதியாகவும் பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்பதால் தெய்வ நம்பிக்கைஇல்லாதவர்களும் கூட அரச மர வழிபாட்டில் ஈடுபடலாம்.
வைகாசி அமாவாசை அன்று அஸ்வத்த பிரதக்ஷணம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அஸ்வந்தம் என்றால் அரசமரம் என்று அர்த்தம். பிரதக்ஷணம் என்றால் வலம் வருதல் என்று அர்த்தம். அதனால் வைகாசி அமாவாசை அன்று அரச மரத்தை வளம் வந்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது புராணங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்கிறது. அன்றைய தினத்தில் சூரிய உதயம் ஆன பிறகு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.அதேபோல் காலை 11 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடித்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். அதேபோல் அரச மரத்தடியில் தீபம் ஏற்றுவதற்கு அகல் விளக்கு, நல்லெண்ணெய், திரி, தீப்பெட்டி, ஊதுபத்தி, கற்பூரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அங்கு முதலில் அரசமரத்தடியில் நாம் எடுத்து வந்த தண்ணீரை ஊற்றிவிட்டு அந்த இடத்தில் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக்கொள்ளுங்கள். பிறகு ஊதுபத்தியை பொருத்தி அரச மரத்திற்கு ஊதுபத்தி தூபம் காட்ட வேண்டும்.
அடுத்ததாக கற்பூரத்தை ஏற்றி வைத்து முழு மனதோடு அந்த அரச மரத்தை 11 முறையோ 27 முறையோ வலம் வர வேண்டும். அவ்வாறு வலம் வரும் பொழுது சிவபெருமானின் மந்திரங்களையும், பெருமாளின் மந்திரங்களையும், மகாலட்சுமி தாயாரின் மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டும். மந்திரம் தெரியாதவர்கள் “ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணா, ஓம் மஹாலட்சுமியே போற்றி” என்று கூறிக் கொண்டே வலம் வந்து தரையில் விழுந்து வணங்கி அங்கேயே குறைந்தபட்சம் அரை மணி நேரம் அமர்ந்திருக்க வேண்டும்.
இதோடு இயன்றவர்கள் அரச மரத்தடியில் இருக்கக்கூடிய எறும்புகளுக்கு பச்சரிசி மற்றும் வெள்ளத்தை தூவி விடுவதன் மூலம் கர்ம வினைகளும் குறையும். இவ்வாறு நாம் அரச மரத்தை வைகாசி அமாவாசை தினத்தன்று வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி, மகாவிஷ்ணு, சிவபெருமானின் அருளோடு சனீஸ்வர பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே:திங்கட்கிழமை அமாவாசை காலை சொல்ல வேண்டிய மந்திரம்
பலவிதமான சிறப்பு அம்சம் பொருந்திய வைகாசி அமாவாசை அன்று முன்னோர்களை வழிபாடு செய்வதை போலவே அரசமரத்தையும் நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் தீர்ந்து சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறேன் கொள்கிறோம்.