பணம் என்பது நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. பணம் இருந்தால்தான் நம்மால் நம்முடைய வாழ்க்கையை வாழ முடியும். அந்த வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். அப்படிப்பட்ட பணத்தை நாம் பல விதங்களில் சம்பாதித்தாலும், சம்பாதித்த பணம் கையில் தங்காமல் வீண் செலவாகிக் கொண்டே இருக்கிறது என்பவர்களும், வாங்கிய கடனை திருப்ப அடைக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும் செய்ய வேண்டிய ஒரு செம்பருத்தி பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணம் கையில் தங்க பரிகாரம்
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான மலர்கள் உகந்த மலர்களாக திகழும். ஒரு சில மலர்கள் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மலராக இருக்கும். அந்த வகையில் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மலராகவும், அதே சமயம் தன ஆகர்சனத்தை ஈர்க்கக்கூடிய மலராகவும், பிரபஞ்ச பேராற்றலை தன்னகத்தேக் கொண்ட மலராகவும் திகழ்வதுதான் செம்பருத்தி மலர். ஒற்றை செம்பருத்தி மலரை வைத்து நாம் மிகவும் எளிமையான முறையில் இப்படி பரிகாரம் செய்ய நம்முடைய கையில் பணம் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து கொண்டே இருக்கும். அந்த பரிகாரத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு உகந்த நாட்களாக வளர்பிறை நாட்கள் திகழ்கின்றன. இருப்பினும் இந்த வளர்பிறை நாட்களில் அஷ்டமி, நவமி, கரிநாள் போன்ற நாட்களை தவிர்த்துக் கொள்வதும் அதே சமயம் யார் இந்த பரிகாரத்தை செய்கிறார்களோ அவர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாகவும் பார்த்து செய்ய வேண்டும். இதற்கு நமக்கு ஒரு கண்ணாடி கிண்ணம் வேண்டும். சிறிய அளவில் இருந்தால் போதும். இது நிறைய சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரே ஒரு ஏலக்காயை இடித்து அதன் விதைகளை போட்டு விட வேண்டும்.
அதற்கு மேல் ஒரே ஒரு சிவப்பு நிற செம்பருத்தி பூவை எடுத்து அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். இப்பொழுது உங்களுடைய வலது கையில் இருக்கும் சுண்டு விரலை மட்டும் தண்ணீருக்குள் வைத்து “ஓம் ஸ்ரீம் ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு உங்களுடைய பணம் தொடர்பான எந்த வேண்டுதலாக இருந்தாலும் கோரிக்கையாக இருந்தாலும் அதை முழு மனதோடு நினைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த செம்பருத்திப் பூவை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 11 நாட்கள் நாம் செய்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய பணம் தொடர்பான தரித்திரம் முற்றிலும் நீங்கும். பணம் ஏதாவது ரூபத்தில் நம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். வந்த பணமும் வீண் விரயம் ஆகாமல் சேமிப்பாக உயரும்.
இதையும் படிக்கலாமே: ஆனி மாதம் முழுவதும் தன வசியம் ஏற்பட
எளிதில் கிடைக்கக்கூடிய செம்பருத்தி பூவை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்பவர்களுக்கு அவர்களுடைய கடன் பிரச்சனை தீர்வதோடு, பணவரவில் இருக்கக்கூடிய தடைகளும் விலகும். மேலும் வீண் விரயங்கள் குறைந்து சேமிப்புகள் உயர ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.