மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் காரிய தடைகள் விலகும் கூடிய வாரமாக இருக்கும். யாரைப் பிடித்தால் இந்த வேலை நடக்கும் என்று பல நாள் சிந்தித்திருப்பீர்கள். இந்த வாரம் உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து முடிக்க இறைவன் மனித ரூபத்தில் வந்து உதவி செய்யப் போகின்றான். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட சக்சஸ் கொடுக்க போறீங்க. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இழுபறியாக இருந்து வந்த அத்தனை தடைகளும் சரியாகிவிடும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தினமும் விநாயகரை கும்பிடுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். வருமான உயரம். சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். சவால் விட்ட இடத்தில் தலைநிமிர்ந்து நடப்பீர்கள், ஜெயிப்பீங்க. எந்த விஷயத்தையும் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சொத்து சுகம் வண்டி வாகனம் வாங்கவும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். பிள்ளைகளுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கட்டுப்பாடுகள் தேவை. எளிதில் ஜீரணம் ஆகாத உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நன்மையை தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாரமாக இருக்கும். உங்களுக்கு தேவையான உபயோகம் உள்ள பொருட்களை வாங்கி மகிழுங்கள். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். வேலையில் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. எப்போதும் சிரித்து பேசும் நண்பர்களையும் இந்த வாரம் கொஞ்சம் நம்பாதீங்க. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் முன்னே கை நீட்டி குறைகளை சுட்டிக்காட்டி விட்டாலும், அவர்களை நம்பி விடலாம். மனிதர்களோடு பழகும் போது இந்த வாரம் கவனம் தேவை. தினமும் அனுமனை கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலை, வெளிநாடு சம்பந்தப்பட்ட வியாபாரத்தை மேற்கொள்ளும் முயற்சிகள் நல்லபடியாக வெற்றியை கொடுக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மேலதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். சில பேருக்கு சம்பள உயர்வுடன், பிரமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். அவசரப்பட்டு யாரையும் குறை பேசாதீர்கள். வீட்டு பெரியவர்களின் பேச்சை மதிக்க வேண்டும். மற்றபடி இந்த வாரம் பெருசாக எந்த பிரச்சனையும் வராது. தினமும் பைரவர் வழிபாடு செய்யுங்கள். நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கக் கூடிய வாரமாக இருக்கும். எதிலும் நிதானத்தோடு இருப்பீர்கள். தேவையற்ற சந்தேகங்கள் உங்கள் மனதில் இருந்து விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தை நிலை நாட்ட அயராது உழைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற லாபத்தையும் பெறுவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக முடியும். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் இந்த வார இறுதியில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருக்கவும். தினமும் பெருமாள் வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அந்தஸ்து உயர கூடிய வாரமாக இருக்கும். நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். செல்லும் இடமெல்லாம் சீரும் சிறப்புடனும் செழிப்போடும், வளம் வருவீர்கள். குறிப்பாக சொல்லப் போனால் அரசியல்வாதிகள், கலைஞர்கள் இவர்களுக்கு எல்லாம் இந்த வாரம் நல்ல அணுகலமான வாரமாக இருக்கும். பிரபல்யமாவதற்கு வாய்ப்புகள் நிறைய உங்களைத் தேடி வரும். வியாபாரத்தை பொருத்தவரை பெரிய லாபமும் இருக்காது நஷ்டமும் இருக்காது. சீராக நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் ஒருவருக்கு ஒருவர் பொய் சொல்லிக் கொள்ள வேண்டாம். தினமும் சிவனை கும்பிட்டால் மேலும் நன்மைகளை அடைவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் சந்தோஷம் இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் வரும். நிதிநிலைமை சீராகும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பெரிய பண பிரச்சனையிலிருந்து விடுபட்டு மன நிம்மதியை அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் திருமணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும், இந்த வாரம் நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. மனிதநேத்துடன் இரண்டு ஏழை குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற படிப்பு உதவியை செய்யுங்கள். நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் ரொம்பவும் பிடிவாதமாக இருக்கக் கூடாது. எல்லா விஷயத்தையும் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும். மேலதிகாரிகளை எதிர்த்து வாக்குவாதம் செய்து, சண்டை போடாதீர்கள். வியாபாரத்திலும் அதே போல தான். வாடிக்கையாளர்களையும் பார்ட்னரோடும் வாக்குவாதம் வேண்டாம். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் நிதானம் தேவை. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நின்றால் பிரச்சனை உங்களுக்குத்தான். பெரியவர்களது பேச்சைக் கேட்க வேண்டும். அடுத்தவர்கள் ஆலோசனை இல்லாமல் சுயமாக சிந்தித்து அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. தினமும் குல தெய்வத்தை கொண்டாடுங்கள். பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் உறுதியோடு இருப்பீர்கள். யாரை கண்டு பயப்பட மாட்டீர்கள். உற்சாகமும் துணிச்சலும் பல மடங்கு அதிகரித்திருக்கும். மேலதிகாரிகளாக இருந்தாலும் சரி, பாட்னராக இருந்தாலும் சரி, வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, உங்கள் பேச்சு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருக்கும். கோழைத்தனமாக இருந்து சாதிக்காமல் விட்டதை, எரிமலையாக பொங்கி சாதிக்க போகும் வாரம் இது. கொஞ்சம் அதிரபுதிரியான வாரமாக தான் இருக்கும். எதற்கும் கவனத்தோடு இருங்கள். தினமும் முருகரை கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் மனதை ஒருநிலை படுத்த வேண்டும். உங்கள் மனது அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எந்த வேலையை செய்வது, எந்த முடிவு எடுப்பது, என்று தெரியாமல் எல்லா வேலையையும் அரைகுறை வேலையாக செய்து வைப்பீர்கள். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை முடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுத்த வேலையை பார்க்கலாம். அவர் சொல்வதை, இவர் சொல்வது என்று எல்லோர் சொல்வதையும் காதில் போட்டுக் கொண்டு, மனதை குழப்பிக் கொள்ளக் கூடாது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சுயபுத்தியில் சிந்திக்கவும். மன ஒருமைப்பாட்டிற்கு தினமும் சிவனை கும்பிட்டு தியானம் செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் உங்களுக்கான பிரச்சனைக்கு தெளிவான முடிவை தேர்ந்தெடுப்பீர்கள். எந்த ஒரு குழப்ப நிலையில் இருக்காது. வேலைக்கு போலாமா வேண்டாமா. புது வேலை அப்ளிகேஷன் போடலாமா, வேண்டாமா? புது வியாபாரம் தொடங்கலாமா வேண்டாமா? எல்லா கேள்விகளுக்கும் தெளிவான ஒரு பதில் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த குழப்பம், பிள்ளைகளோடு இருந்து வந்த மனஸ்தாபம் எல்லாம் சரியாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் கூட ஒன்று சேர்வீர்கள். மனக்குழப்பத்திலிருந்து விடுபட்டு தினம் தினம் நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள். குலதெய்வத்திற்கு மறக்காமல் நன்றி சொல்லுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமைசாலிகளாக வளம் வருவீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், வாய் ஜால வித்தையை வைத்துக்கொண்டு பிரச்சனையை சரி செய்து விடுவீர்கள். எவ்வளவு பெரிய கோவத்தையும் பேசி பேசி தணிக்க கூடிய பக்குவம் உங்களுக்கு வெளிவெளிபடும். எக்காரணத்தை கொண்டும் உங்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்களை வெளியில் சொல்லாதீங்க. பாதி கண் திருஷ்டியால் பிரச்சனை வர வாய்ப்புகள் இருக்கிறது. மற்றபடி வேலை வியாபாரம் நிதி நிலைமை எல்லாம் சீராகத்தான் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். பெரிசாக பிரச்சனை இல்லை. தினமும் ஐயப்பனை கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.