சாந்தரூபமாக இருக்கக்கூடிய தெய்வங்களை விட உக்கிரமாக இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு சக்திகள் அதிகம் என்றே கூறலாம். அந்த தெய்வங்களை நாம் துடிப்பான தெய்வம் என்று கூறுவோம். அந்த தெய்வங்களை முழுமனதோடு நம்பி அவர்களை சரணாகதி அடைந்து விட்டோம் என்றால் நாம் என்ன கேட்டாலும் அதை வாரி வழங்குவார்கள் என்றே கூறலாம். அந்த வகையில் துடிப்பான தெய்வமாகவும் உக்கிர தெய்வமாகவும் அதே சமயம் தாய்மை உள்ளம் கொண்ட தெய்வமாகவும் திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனுக்கு நாம் எந்த முறையில் அர்ச்சனை செய்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
வேண்டிய வரத்தை வழங்கும் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேண்டுதலை முன் வைத்து தான் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுகிறோம். எந்த வேண்டுதலும் இல்லாமல் தெய்வ வழிபாட்டை செய்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் பலரும் பல விதங்களில் பல தெய்வங்களுக்கு பல விதமான வேண்டுதல்களை வைத்திருப்பார்கள். இருப்பினும் அந்த வேண்டுதல்கள் நிறைவேறாமலேயே போயிருக்க வாய்ப்புகளும் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாராகி அம்மனை முழுமனதோடு நம்பி ஆஷாட நவராத்திரியில் வரக்கூடிய பஞ்சமி தினத்தன்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய அவர்கள் வேண்டியது அவர்களுக்கு கிடைக்கும்.
இந்த வழிபாட்டை ஜூன் மாதம் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். அதே போல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்திலும் இந்த வழிபாட்டை செய்யலாம். இதற்கு வீட்டில் வாராஹி அம்மனின் படம் வேண்டும் சிலை வேண்டும் என்று எதுவும் கிடையாது. அப்படி படம் சிலை இருக்கும் பட்சத்தில் அதற்கு முன்பாக இந்த அர்ச்சனை செய்யலாம். ஒருவேளை படம் சிலை இல்லை என்பவர்கள் வாராகி அம்மனை நினைத்து ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அந்த தீபத்திற்கு முன்பாக இந்த அர்ச்சனையை செய்ய வேண்டும்.
இந்த அர்ச்சனையை செய்வதற்கு சுத்தமான தாழம்பூ குங்குமத்தை பயன்படுத்தலாம். அதே போல் வீட்டில் அரைத்த மஞ்சளை பயன்படுத்தலாம். கடையிலிருந்து மஞ்சள் தூள் வாங்கி இந்த அர்ச்சனை செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. விரலி மஞ்சள் வாங்கி வந்து அதை நன்றாக இடித்து வீட்டிலேயே பொடி செய்து அந்த மஞ்சள் துளை பயன்படுத்தி அர்ச்சனை செய்யும் பொழுது அதிக அளவில் பலன் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. மஞ்சள் அர்ச்சனை செய்வதாக இருந்தாலும் குங்கும அர்ச்சனை செய்வதாக இருந்தாலும் அதனுடன் சிறிது பச்சை கற்பூரம், சிறிது ஜவ்வாது போன்ற வாசனை மிகுந்த பொருட்களையும் கலந்து அர்ச்சனை செய்யும் பொழுது கூடுதல் பலன் நமக்கு கிடைக்கும்.
வீட்டில் இருக்கக்கூடிய வாராகி அம்மனின் படத்தை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு பின்வரும் இந்த மந்திரத்தை 18 முறை கூறி குங்குமத்தாலோ அல்லது மஞ்சளாலோ வராகி அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இது வாராஹி அம்மனின் பன்னிரெண்டு திருநாமங்கள் ஆகும். இந்த நாமங்களை யார் ஒருவர் கூறி வாராகி அம்மனை முழுமனதோடு நம்பி அர்ச்சனை செய்கிறார்களோ அவர்களுக்கு வாராகி அம்மன் வேண்டிய வரத்தை அருள்வார் என்று கூறப்படுகிறது.
இந்த அர்ச்சனையை செய்யும் பொழுது வாராகி அம்மனுக்கு பிடித்தமான பானகம், கிழங்கு வகைகள் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இதோடு ஏதாவது ஒரு இனிப்பு பொருளையும் நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு நெய்வேத்தியமாக வைத்த பொருட்களை பிரசாதமாக உண்ண வேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சளையும், குங்குமத்தையும் பிறருக்கு பிரசாதமாகவும் வழங்கலாம். தினமும் நம்முடைய நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் வாராஹி அம்மன் நமக்கு பாதுகாப்பு கவசமாக இருந்து நம்மை நல்வழிப்படுத்துவாள். தடைகளை தவிடு பொடியாக்கி வெற்றிகளை வாரி வழங்குவார்.
மந்திரம்
“ஓம் பஞ்சம்யை நமஹ
ஓம் தண்ட நாதாயை நமஹ
ஓம் சங்கேத்தாயை நமஹ
ஓம் சமயேஸ்வரியை நமஹ
ஓம் சமய சங்கேத்தாயை நமஹ
ஓம் வாராஹியை நமஹ
ஓம் போற்றின்யை நமஹ
ஓம் சிவாயை நமஹ
ஓம் வார்த்தான்யை நமஹ
ஓம் மகா சேனாயை நமஹ
ஓம் ஆக்ஞாசக்ர வாசின்யை நமஹ
ஓம் அறிக்ஞாயை நமஹ”
இதையும் படிக்கலாமே: ஸ்வர்ண வசியம் ஏற்பட ஏற்ற வேண்டிய தீபம்
சக்தி வாய்ந்த வாராஹி அம்மனின் திருநாமங்களை முழு மனதோடு முழு நம்பிக்கையோடும் கூறி வாராகி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய கேட்ட வரத்தை வாராகி அம்மன் அருள்வாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.