27 நட்சத்திரங்கள் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தெய்வம் அனுக்கிரகம் தரக்கூடிய தெய்வமாக திகழ்கிறது. அந்த வகையில் பெருமாளுக்கு உகந்த நட்சத்திரமாக திகழ்வதுதான் திருவோண நட்சத்திரம். அப்படிப்பட்ட திருவோண நட்சத்திரம் என்பது பெருமாளுக்குரிய கிழமையான சனிக்கிழமை அன்று சேர்ந்து வருகிறது. இது கூடுதல் சிறப்பை தரும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த நாளில் பெருமாளை எந்த முறையில் வழிபட்டால் தடைகள் நீங்கி வெற்றிகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காக்கும் கடவுளாக திகழக்கூடிய பெருமாள்தான் அனைத்து செல்வங்களையும் நமக்கு தரக்கூடிய தெய்வமாக திகழ்கிறார். பெருமாளை முழு மனதோடு யார் ஒருவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்குவதோடு செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சனிக்கிழமையோடு பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வரும்பொழுது அந்த நாளில் நாம் பெருமாளை மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ஜூலை மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை அன்றைய தினம் திருவோண நட்சத்திரமும் இருக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்த நாளில் பெருமாளை நாம் காலையில் மாலையிலும் கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது கூடுதல் பலனைத் தரும். வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம்.
காலையில் பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக காலை 7:45 மணியிலிருந்து 8:45 மணி திகழ்கிறது. ஒருவேளை அந்த நேரத்தில் வழிபாடு செய்ய இயலவில்லை என்பவர்கள் காலை 10:45 மணியிலிருந்து 11 45 மணிக்குள் வழிபாடு செய்யலாம். வீட்டு பூஜை அறையில் பெருமாளின் படத்திற்கு முன்பாக வடக்கு திசை பார்த்தவாறு மூன்று நெய் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு துளசி மாலை, தாமரைப்பூ, வாசனை மிகுந்த மலர்கள் போன்றவற்றை வைத்த அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
ஒரு சிறிய டம்ளரில் துளசி தீர்த்தத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு இனிப்பு என்பது மிகவும் பிடிக்கும் அதிலும் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய லட்டுவை நெய்வேத்தியமாக வைக்கும் பொழுது கூடுதல் பலன் கிடைக்கும். பிறகு வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு பெருமாளின் ஒரு மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இதே மந்திரத்தை மாலை நேரத்திலும் நாம் 108 முறை கூற வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த இனிப்பையும் துளசி கீர்த்தத்தையும் வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும்.
மாலை நேரத்தில் வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது 5:30ஈ மணியிலிருந்து இரவு 11:30 மணிக்குள் எந்த நேரத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். மாலையிலும் பெருமாளின் படத்திற்கு முன்பாக மூன்று நெய் தீபங்களை ஏற்றி வைத்து பெருமாளுக்கு திரும்பவும் புதிதாக ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதேபோல் துளசி தீர்த்தத்தையும் வைக்க வேண்டும். பிறகு அதேபோல் வடக்கு திசை பார்த்தவாறு இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இந்த முறையில் திருவோண நட்சத்திர நாளன்று காலையிலும் மாலையிலும் பெருமாளின் இந்த ஒரு திருநாமத்தை 108 முறை கூறி நாம் வழிபாடு செய்யும்பொழுது பெரும்பாளின் பரிபூரண அருளால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றிகள் உண்டாகும். வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மந்திரம்
ஓம் ஸ்ரீம் நமோ வெங்கடேசாய நமஹ
இதையும் படிக்கலாமே: வேண்டியது கிடைக்க அபிஜித் நட்சத்திர நாள் வழிபாடு
எளிமையான வழிபாட்டு முறையாக இருந்தாலும் இந்த வழிபாட்டை யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் வெற்றிக்கு மேல் வெற்றிகளும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.