கடன் பிரச்சினைகளால் மன உளைச்சலில் தவிப்பவர்கள் எந்த தெய்வத்திற்கு? என்ன பரிகாரம் செய்வது? என்று யோசிக்க வேண்டாம். எல்லா செல்வங்களுக்கும் அதிபதியாக திகழ்பவள் மகாலட்சுமி தாயார் ஆவார். பெருமாளுடன் கூடிய மகாலட்சுமியை “லக்ஷ்மி பெருமாள்” என்று கூறுவார்கள். இந்த லட்சுமி பெருமாளுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வந்தால் சகல கடன்களும் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். லட்சுமி பெருமாளுக்கு தேங்காய் தீபம் ஏற்றி கடனை அடைப்பது எப்படி? என்னும் ஆன்மீகம் சார்ந்த பரிகார முறையை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
பரிகாரம் செய்ய தேவையானவை:
ஒரு முழுமையான, உடைக்கப்படாத ஒற்றைக்கண் தேங்காய் (தேங்காயின் மூன்று கண்களில், ஒன்று மட்டும் சற்று அகலமாக இருக்கும், அதுவே ஒற்றைக்கண்.
நல்லெண்ணெய் அல்லது நெய்
திரி (பஞ்சு திரி அல்லது தாமரைத் தண்டு திரி சிறந்தது).
தீப்பெட்டி
கடன் அடைய பரிகாரம் செய்யும் முறை:
தேங்காயின் மேலே உள்ள ஒற்றைக்கண் பகுதியை கவனமாக ஒரு சிறிய ஓட்டை போல திறந்து கொள்ளவும். தேங்காயை உடைத்து விடக்கூடாது. அந்த ஓட்டை வழியாக, தேங்காய்க்குள் இருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றி விடவும். நீர் வெளியேறியதும், தேங்காய்க்குள் நல்லெண்ணெய் அல்லது நெய்யை நிரப்பவும். திரியை எண்ணெயில் நனைத்து, தேங்காயின் ஒற்றைக்கண் ஓட்டையில் வைக்கவும். தேங்காயை ஒரு பச்சரிசி பரப்பிய தட்டில் வைத்து, தீபத்தை ஏற்றவும். இந்த தீபத்தை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில், மாலை வேளையில், சூரியன் அஸ்தமனமான பின்பு ஏற்றலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில், அல்லது நீங்கள் வணங்கும் தெய்வத்தின் படத்திற்கு முன்பு இந்த தீபத்தை ஏற்றலாம்.
லட்சுமி பெருமாள் மட்டுமல்லாமல் பைரவர், துர்க்கை அம்மன் அல்லது விஷ்ணு போன்ற கடன் நிவர்த்திக்குரிய தெய்வங்களுக்கும் இந்த தீபம் மிகவும் உகந்தது. தீபத்தை ஏற்றும் போது, மனதார உங்களின் கடன் தொல்லைகள் நீங்க வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். பின் “ஓம் நமோ நாராயணாய” என்னும் திருமந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லட்சுமி குபேர மந்திரத்தையும் நீங்கள் 108 முறை சொல்லலாம். தீபம் முழுவதுமாக எரிந்து அணைந்த பிறகு, தேங்காயை எடுத்து, உள்ளே இருக்கும் தேங்காயை நீங்கள் சிறிது உட்கொண்டு, மீதியை பசு மாட்டிற்கு கொடுக்கலாம்.
லக்ஷ்மி குபேர மந்திரம்:
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் சௌம் ஓம் ஹ்ரீம் ஐம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் ஓம்”
இதையும் படிக்கலாமே:
நடக்காத காரியமும் நடக்க ஆஞ்சநேயர் வழிபாடு
தேங்காய்த் தீபம் ஏற்றும் போது உருவாகும் நேர்மறை ஆற்றல், தீராத பல ஆண்டு கடன் சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, புதிய வழிகளைத் திறக்கும் என்றும், செல்வ வளம் பெருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இது மனத் தூய்மையுடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும், முழுமையான பக்தியுடனும் செய்யப்பட வேண்டும் என்பது முக்கியம். இது பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு எளிய சக்தி வாய்ந்த பரிகார முறையாகும், மேலும் பலரும் இதன் மூலம் பலன் அடைந்துள்ளதாக நம்புகின்றனர். நம்பிக்கையோடு செய்து பாருங்கள், நிச்சயம் நல்லதே நடக்கும்.