ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு என்ற பழமொழியை கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம். சிவபெருமானும் பெருமாளும் ஒரே விதமான சக்தியை கொண்டவர்கள் என்றும் அவர்களுக்கு சரி நிகர் அவர்களே தான் என்றும் பொருள் படக்கூடிய பழமொழியாக இந்த பழமொழி திகழ்கிறது. அப்படிப்பட்ட பழமொழிக்கு உதாரணமாக திகழக்கூடியவர்தான் சங்கரநாராயணர். அப்படிப்பட்ட சங்கரநாராயண அவதாரத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக பார்வதி தேவி ஊசி முனையில் தவம் இருந்து வழிபட்டார் என்றும் அப்படி சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் சங்கரநாராயணராக காட்சியளித்த நாளை தான் ஆடித் தபசு என்று கூறப்படுகிறது.
இந்த ஆடித்தபசு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சங்கரநாராயணன் கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இயன்றவர்கள் அன்றைய தினம் சங்கரநாராயணன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது நல்ல பலனை தரும். இயலாதவர்கள் தங்களுடைய வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி அம்மனின் அருளையும் சங்கரநாராயணனின் அருளையும் பெறலாம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
இன்பங்களை தரும் ஆடித்தபசு வழிபாடு
ஆடித்தபசு என்பது ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி ஆடி மாதத்தில் 22ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் காலை 7:40 மணியிலிருந்து 11:40 மணி வரை அல்லது மாலை 6:30 மணியிலிருந்து இரவு 8:30 மணி வரை இருக்கக்கூடிய நேரத்தில் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு சங்கரநாராயணனின் படம் இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் ஒன்பது என்ற எண்ணிக்கையில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
இந்த தீபம் அனைத்தும் வடக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய நெய்வேத்தியங்களை வைக்க வேண்டும். பிறகு “ஓம் சக்தி பராசக்தி” என்னும் அம்மனின் மந்திரத்தை 111 முறை கூற வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். நிலை வாசலுக்கும் தூபம் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் ஆடித்தபசு நாள் அன்று வீட்டில் எளிமையான முறையில் பூஜை செய்வது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி இன்பங்களை உண்டாகும் என்றும், கோமதி அம்மன் மற்றும் சங்கர நாராயணரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: நன்மைகள் நடக்க வழிபாடு
சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் பெருமாள் இவர்கள் மூவரையும் ஒருசேர வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக தான் ஆடித் தபசு நாள் திகழ்கிறது. அன்றைய நாளில் வீட்டில் எளிமையான முறையில் இப்படி வழிபாடு செய்ய மூவரின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும். அதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.