ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றாலும் கடைசி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு பெற்றதாக திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் நம்முடைய வீட்டில் மிகவும் எளிமையான முறையில் விளக்கு பூஜை செய்வதன் மூலம் அம்மனின் அருளை பரிபூரணமாக பெறுவதோடு சகல செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழலாம். அந்த விளக்கு பூஜையை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி கடைசி வெள்ளி திருவிளக்கு பூஜை
அம்மனையே விளக்காக பாவித்து செய்யக்கூடிய பூஜையை தான் விளக்கு பூஜை என்று கூறுகிறோம். இந்த விளக்கு பூஜையை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அன்றைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6:00 மணியிலிருந்து 10:15 மணி, பகல் 12:15 இல் இருந்து 1:15 மணி, மாலை 5:30 மணியிலிருந்து 9:30 மணிக்குள் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த விளக்கு பூஜையை செய்யலாம். பூஜை அறையில் பூஜை அறையிலோ அல்லது ஹாலிலோ இந்த விளக்கு பூஜை செய்யலாம். குடும்ப நபர்கள் அனைவரும் சேர்ந்து இந்த விளக்கு பூஜையை செய்வது கூடுதல் பலனை தரும். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் அழைத்து வந்து திருவிளக்கு பூஜை செய்யலாம்.
திருவிளக்கு பூஜை செய்யக்கூடிய இடத்தை மஞ்சள் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து பச்சரிசி மாவினால் கோலம் போட்டுக்கொள்ள வேண்டும். மனைபலகை, தாம்பாளம், வாழை இலை இவை மூன்றில் எது இருக்கிறதோ அதை வைத்து அதன் மேல் சிறிது பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் நம் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை சுற்றி மஞ்சளையும் குங்குமத்தையும் மலர்களையும் தூவி விட்டுக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை தீக்குச்சியை பயன்படுத்தி ஏற்றக்கூடாது. துணை விளக்கை பயன்படுத்தி ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாகவே வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய மற்ற தீபங்களை ஏற்றி வைத்து வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்ட பிறகுதான் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு வாழையிலையை விரித்து அதில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய், இனிப்பு பொருட்கள் போன்றவற்றை வைக்க வேண்டும். மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். முதலில் விநாயகப் பெருமானை மனதார வழிபாடு செய்து விநாயகப் பெருமானுக்கு மலர்களால் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். பிறகு பின்வரும் இந்த திருவிளக்கு மந்திரத்தை கூறி விளக்கிற்கு வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சுமங்கலி பெண்களை அழைத்து திருவிளக்கு பூஜை செய்பவர்கள் சுமங்கலி பெண்கள் வீடு திரும்பும் பொழுது அவர்களுக்கு சுமங்கலி செட்டை கொடுத்து அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரம்
விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:
விளக்கே திருவிளக்கே….
இதையும் படிக்கலாமே: நோய்களை நீக்கும் துவரம் பருப்பு பரிகாரம்
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இந்த முறையில் திருவிளக்கு பூஜை செய்பவர்களுக்கு மங்களங்கள் அனைத்தும் பெருகும், அனைத்து விதமான செல்வங்களும் தேடிவரும், தீர்க்க சுமங்கலி யோகமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.