சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக பிரதோஷம் திகழ்கிறது என்றும் இந்த பிரதோஷம் உருவான கதை பற்றியும் அனைவரும் அறிந்திருப்போம். பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டால் நமக்கு சிவபெருமானின் அருளோடு மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய அனைத்து தெய்வங்களின் அருளையும் நம்மால் எளிதில் பெற முடியும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பிரதோஷம் தேய்பிறை பிரதோஷமாக வரும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த பிரதோஷமானது விஷ்ணு பகவானுக்குரிய புரட்டாசி மாதத்தில் மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமையில் வருவது என்பது கூடுதல் சிறப்பு. இப்படி சிறப்பு வாய்ந்த இந்த பிரதோஷத்தை கைலாச பிரதோஷம் என்று கூறுவது உண்டு. இந்த பிரதோஷ நாளில் நாம் மிகவும் எளிமையான முறையில் சிவபெருமானை வழிபாடு செய்து வலம் வந்தால் போதும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்குவதோடு நமக்கு யோகங்களும் வந்து சேரும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கைலாச பிரதோஷம் வழிபாடு
செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி புரட்டாசி மாதத்தின் மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை பிரதோஷம் என்பது வருகிறது. பொதுவாக பலரும் பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக நான்கு முப்பது மணியிலிருந்து 6 மணிக்குள் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் வீட்டிலேயோ அல்லது ஆலயத்திலோ சிவ வழிபாட்டை செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இயலாதவர்கள் மாலை 6:00 மணிக்கு மேல் சிவ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அப்படி ஈடுபடக்கூடிய ஒவ்வொரு நபர்களும் இந்த எளிமையான வழிபாட்டு முறையை பின்பற்றினால் போதும். அவர்களின் பாவங்கள் நீங்கி யோகம் அவர்களை தேடி வர ஆரம்பிக்கும்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு விரதம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. அசைவத்தை சாப்பிடாமல் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை வீட்டிலேயும் செய்யலாம் ஆலயத்திலும் செய்யலாம். நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் வீட்டில் சிவலிங்கம் அல்லது சிவன் சிலை வைத்து இருப்பவர்கள் பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த பால் பாக்கெட் பாலாக இல்லாமல் பசும்பாலாக இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். வீட்டு பூஜை அறை பெரியதாக இருக்கும் பட்சத்தில் பூஜை அறையில் நாற்காலியை வைத்து அதற்கு மேல் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்யலாம். பூஜை அறை பெரியதாக இல்லை என்பவர்கள் வீட்டின் மையப் பகுதியான ஹாலில் வைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
ஒரு நாற்காலியை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு தட்டை வைத்து அந்த தட்டிற்கு மேல் வாசனை மிகுந்த மலர்களை பரப்பி அதற்கு மேல் சிவலிங்கம், சிவன் சிலை அல்லது சிவனின் படம் எது இருக்கிறதோ அதை வைத்து வில்வ இலைகளால் உங்களுக்கு தெரிந்த சிவபெருமானின் மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு முன்பாக ஒரு நல்லெண்ணெய் அல்லது நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வலமிருந்து இடமாக சிவபெருமானை 11 முறை வலம் வர வேண்டும். இப்படி வலம் வந்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
இதே முறையில் தான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்கள் நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கு நடுவே சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு நந்தியையும் சிவபெருமானையும் சேர்த்து 11 முறை வலம் இருந்து இடமாக வலம் வர வேண்டும். இப்படி வலம் வந்து சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: பணத்தை ஈர்க்கும் சுவிட்ச் வோர்ட்
சிறப்பு மிகுந்த இந்த தேய்பிறை பிரதோஷ நாளில் இந்த முறையில் சிவபெருமானை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு சிவ அருளால் பாவங்கள் தீரும், யோகங்கள் சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.