பெண்கள் மட்டும் தான் இந்த கஞ்சியை குடிக்க வேண்டுமா. இல்லை, ஆண்களும் இந்த கஞ்சியை தாராளமாக சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலம், குழந்தை பேறு காலத்தில் உடலில் அதிகமான வலிமை, அதிகமான சத்து தேவைப்படும். ஆகவே, பெண்கள் கட்டாயம் வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த உளுந்தங்கஞ்சி எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறும். 30 வயதிற்கு மேல் மூட்டு வலி, இடுப்பு வலி என்ற கஷ்டத்தை அனுபவிக்காமல் இருக்கலாம். பலவிதமான சத்துக்களை கொண்ட இந்த உளுந்து கஞ்சி எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

முதலில் அடுப்பில் அடி கனமான ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 200 கிராம் உளுந்தம் பருப்பை போட்டு, மிதமான தீயில் வறுத்து எடுக்க வேண்டும். உளுந்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். உளுந்தை கருக விடக் கூடாது. அதே சமயம் வறுபடாமலும் இருக்க கூடாது. உளுந்தம் பருப்பு சரியான பக்குவத்தில் வறுபட்ட உடனேயே, அதை வேறொரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். (தேவைப்பட்டால் இதை கருப்பு உளுந்து இலும் செய்யலாம்.)
வறுத்த இந்த உளுந்தம் பருப்புடன், 80 கிராம் அளவு அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றி, வறுத்த உளுத்தம் பருப்பையும் அரிசியையும் நன்றாக மூன்று முறை கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி இந்த உளுத்தம்பருப்பு அரிசியை 4 லிருந்து 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். (அதாவது 1 கப் அளவு உளுந்தம்பருப்பு எடுத்தால், அதே கப்பில் 1/4 கப்புக்கு கொஞ்சம் மேலாக அரிசியை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் – 1 கப் அளவு எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும்.)

அரிசியும் உளுந்தும் நன்றாக ஊறிய பின்பு அதை மிக்ஸி ஜாரில் போட்டு மொழுமொழுவென அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஊறவைத்த தண்ணீரை சேர்த்து நீங்கள் இந்த உளுந்தை அரைத்து கொள்ளலாம். வெண்ணை மாதிரி இந்த உளுந்தை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.
1 கப் அளவு உளுந்துக்கு, 1 கப் வெல்லம் அல்லவா. தேவைப்பட்டால் வெல்லத்தை உங்கள் ருசிக்கு ஏற்ப இன்னும் கொஞ்சம் கூடுதலாக கூட சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, வெல்லம் போட்டு அந்த வெல்லத்தை நன்றாக சூடு செய்து, வெள்ளம் தண்ணீரில் கரைந்த உடன், வெல்லதை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பாகு காய்ச்ச வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. இந்த வெல்லக் கரைசல் தண்ணீர் அப்படியே இருக்கட்டும். (வெல்லத்திற்கு பதிலாக நாட்டு சர்க்கரை, பண வெட்டு எதை வேண்டுமென்றாலும் இந்த உளுந்தங்கஞ்சியில் சேர்த்து குடிக்கலாம். வெள்ளை சர்க்கரையை மட்டும் பயன்படுத்தக் கூடாது.)

இப்போது உளுந்த கஞ்சியை காய்ச்ச போகின்றோம். அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, அந்தத் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு, 1/4 ஸ்பூன் சுக்கு தூள், சேர்த்து கலந்துவிட்டு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் உளுந்து விழுதை பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் ஊற்றி, அடுப்பை பற்ற வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து கை விடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். உளுந்தங்கஞ்சி நன்றாக வெந்து தளதளவென வரும். கஞ்சி கட்டிப் பிடிக்கக் கூடாது. இதற்கு பத்து நிமிடங்கள் வரை எடுக்கும்.

உளுந்த கஞ்சி வெந்து பக்குவமாக தளதளவென வந்தவுடன், பச்சை வாடை முழுமையாக நீங்கியவுடன், கரைத்து வைத்திருக்கும் வெல்லக் கரைசலை உளுந்தங் கஞ்சியில் ஊற்றி கட்டி படாமல் நன்றாக கலந்துவிட வேண்டும். வெல்லமும் உளுந்த கஞ்சியும் சேர்ந்து மீண்டும் ஒரு முறை மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வேண்டும். வெல்லத்தின் பச்சை வாடை போகும் வரை. இறுதியாக இந்த உளுந்த கஞ்சிக்கு கால் ஸ்பூன் ஏலக்காய் பொடியை தூவி விடவேண்டும்.

தேவைப்பட்டால் நெய்யில் முந்திரி பருப்பு, உலர் திராட்சை வறுத்து இந்த உளுந்தங்கஞ்சியுடன் சேர்த்து கலந்து அப்படியே சுட சுட குடித்துப் பாருங்கள். தேவைப்பட்டால் தேங்காய் துருவலை இதன் மேலே தூவியும் சாப்பிடலாம் இன்னும் ரிச்சாக இருக்கும். இந்த உளுந்தங்கஞ்சி ரொம்பவும் தண்ணீராகவும் இருக்கக்கூடாது. ரொம்பவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.

குடிக்கும் பக்குவத்தில் இருக்கலாம். தேவைப்பட்டால் நீங்கள் தளதளவென கொஞ்சம் கெட்டியாக செய்து அப்படியே ஸ்பூனில் அள்ளியும் சாப்பிடலாம். அது உங்களுடைய விருப்பம் தான். வாரத்தில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ இந்த உளுந்தங் கஞ்சியை நம்முடைய உணவாக சேர்த்துக் கொண்டால் உடலுக்கு அவ்வளவு நல்லது. நல்ல மாற்றங்கள் சில நாட்களிலேயே உங்களுக்கு தெரியும். உடல் அசதி ஏற்படாது. பெண்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.