ஹோட்டலிலும், கல்யாண பந்தியிலும் வைக்கக்கூடிய முட்டைகோசு பொரியலுக்கு தனி ருசிதான். என்ன தான் நம்முடைய வீட்டில் அந்த முட்டைகோசுப் பொரியலை பக்குவமாக பார்த்து பார்த்து செய்தாலும், அந்த பொரியல் ஹோட்டல் பொரியல் சுவைக்கு ஈடாகாது. ஆனால், பின்வரும் குறிப்புகளை பின்பற்றி உங்க வீட்ல ஒரு முறை முட்டைகோசுப் பொரியல் செய்து பாருங்க. அச்சு அசல் ஓட்டல் சுவை அப்படியே கிடைக்கும். வாங்க அந்த அட்டகாசமான ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

முதலில் 150 கிராம் அளவு முட்டைக்கோசை பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பும் 1 மீடியம் சைஸ் கேரட்டை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பச்சை பட்டாணி ஃபிரஷாக கிடைத்தால், அந்த பச்சை பட்டாணியை தோலுரித்து ஒரு கைப்பிடி அளவு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
காய்ந்த பச்சை பட்டாணி தான் இருக்கிறது என்றால், அதை தண்ணீரில் ஊற வைத்து வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக 4 லிருந்து 5 ஸ்பூன் பாசிப்பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அதில் இருக்கும் தண்ணீரை எல்லாம் வடிகட்டி, பாசிப்பருப்பை மட்டும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த பாசிப்பருப்பு தான். பாசிப்பருப்பை தனியாக வேக வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பொரியலில் போடும் போது இந்த பாசி பருப்பு வெந்து கொள்ளும்.
இப்போது பொரியலை செய்ய போகலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் – 3, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக நறுக்கி வைத்திருக்கும் முட்டை கோசு, கேரட், பட்டாணி இந்த மூன்று பொருட்களையும் கடாயில் சேர்த்து 2 நிமிடம் வரை எண்ணெயில் வதக்க வேண்டும். அடுத்தபடியாக ஊற வைத்த பாசிப்பருப்பை, காயோடு சேர்த்து நன்றாகக் கலந்து விடுங்கள். இந்த இடத்தில் தேவையான உப்பு தூளைத் தூவி, 1/4 கப் அளவு தண்ணீரை காயின் மேலே நன்றாக தெளித்து, ஒரு மூடி போட்டு 6 லிருந்து 8 நிமிடங்கள் இந்த காயை மூடி போட்டு வேக வைக்கவேண்டும். இடையிடையே மூடியை திறந்து காயை கலந்து விட்டு கொண்டே இருங்கள்.

எட்டு நிமிடத்திற்குள் காயும், நீங்கள் போட்ட பாசிப்பருப்பும் நன்றாக வெந்துவிடும். பொரியலில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் நன்றாக சுண்டும் வறை காயை வதக்கி விடுங்கள். இறுதியாக தேங்காய் துருவலை தூவி, ஒரு நிமிடம் போல வதக்கி, கருவேப்பிலை கொத்தமல்லி தழைகளைத் தூவி சுடச்சுட பரிமாறினால், இந்த பொரியல் ஹோட்டலில் வாங்கிய பொரியலா என்று கட்டாயம் வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். அந்த அளவுக்கு சூப்பராக இருக்கும்.

பின்குறிப்பு: இந்த பொரியலுக்கு காரத்திற்கு நாம் வெறும் பச்சை மிளகாயை மட்டும் தான் சேர்த்து இருக்கின்றோம். உங்களுக்கு விருப்பமாக இருந்தால் இதில் கொஞ்சம் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்தும் வேக வைத்து பொரியல் தயார் செய்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.