“உணவே மருந்து” என்ற வார்த்தைக்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுத்தால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. ஆனால் அவ்வாறு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுப்பொருட்களை எவரும் விரும்பி உண்பதில்லை. அந்த வகையில் நெல்லிக்காய் மற்றும் இஞ்சியில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பல இருக்கின்றன. இவை சித்த வைத்தியத்தில் பெரும் பங்கினை வகிக்கின்றன. இந்த இஞ்சி மற்றும் நெல்லிக்காயை வைத்து ஒரு சுவையான துவையல் அரைத்துக் கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் தட்டாமல் சாப்பிடுவார்கள். இதனை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

இஞ்சி துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
இஞ்சி – கால் கப், காய்ந்த மிளகாய்– மூன்று, தேங்காய் துருவல் – அரை மூடி, உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன், இஞ்சி, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய் துருவல் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் சிறிய துண்டு புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள இஞ்சித் துவையலுடன் சேர்த்து விட சுவையான இஞ்சி துவையல் தயாராகிவிட்டது. இதனை நீங்கள் உணவில் சேர்த்து சாப்பிட உங்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

நெல்லிக்காய் துவையல்:
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் – 6, தேங்காய் துருவல் – 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
நெல்லிக்காய்களை கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகள், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அவற்றுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, பின்னர் அதனுடன் பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலையும் சேர்த்து அவற்றை நன்றாக வதக்கிக் கொண்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும். தாளித்த பொருட்களை அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் துவையலில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான நெல்லிக்காய் துவையல் தயாராகிவிட்டது.

இவ்வாறு இஞ்சி மற்றும் நெல்லிக்காயை துவையலாக அரைத்து இட்லி மற்றும் தோசையுடன் தொட்டுக்கொள்ள கொடுத்தால் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இதனை சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.