ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் உலகம் முழுதும் இருக்கும் பக்தர்களால் ஜென்மாஷ்டமி என்கிற பெயரில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில், அஷ்டமி திதியில் சிறப்புற கொண்டாடப்பட்டு வருகிறது. கோகுலத்தில் வளர்ந்து, அஷ்டமி திதியில் பிறந்ததால் கோகுலாஷ்டமி என்கிற பெயரும் உண்டு. இந்நாளில் கிருஷ்ணருக்கு நைவேத்தியம் படைக்க நெய்ப் பணியாரம் என்று கூறப்படும் இந்த இனிப்பு பணியார அப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதை சுலபமான முறையில் செய்து கிருஷ்ணருடைய அருளை எப்படி பெறுவது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

இனிப்பு பணியார அப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், துருவிய தேங்காய் – அரை கப், வாழைப்பழம் – 2, கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் – 2, உப்பு – கால் டீஸ்பூன், வறுத்த எள் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவிற்கு.
இனிப்பு பணியார அப்பம் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து கலைந்து சுமார் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை எல்லாம் வடிகட்டி விட்டு பத்து நிமிடம் அப்படியே ஓரமாக வைத்து விடுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு வெல்லம் பொடித்து சேர்த்துக் கொள்ளவும். அதில் அரை டம்ளர் அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அடுப்பைப் பற்ற வைத்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். வெல்லம் தண்ணீரில் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஊற வைத்து வடிகட்டிய அரிசியை நன்கு நைசாக தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவுடன் மிக்சி ஜாரிலேயே, துருவிய தேங்காய் அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ரெண்டு பழுத்த வாழைப்பழம் சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டு ஏலக்காய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்து கொள்ளுங்கள். கால் டீஸ்பூனை விட குறைவாக உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கரைத்து வைத்துள்ள வெல்லத்தை ஆறியதும் வடிகட்டி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் ஒரு சுற்று சுற்றி பணியார மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் பணியார மாவை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். சுமார் இரண்டு மணிநேரம் வரை அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதன் பின்னர் மாவுடன் வறுத்த எள் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். நெய்யில் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வதக்கி அதனையும் அப்படியே நெய்யுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் குழிப் பணியாரம் செய்யும் சட்டியில் குழிகளில் நெய் ஊற்றி காய விடுங்கள். நெய் விரும்பாதவர்கள் நல்லெண்ணெய் ஊற்றியும் செய்யலாம்.

பின்னர் பணியார மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றுங்கள். ஒருபுறம் வெந்ததும் கம்பி வைத்து மறுபுறம் திருப்பி போடுங்கள். எல்லா புறமும் சிவக்க வெந்ததும் எடுத்து விட வேண்டியது தான். அவ்வளவுதாங்க! ரொம்ப ரொம்ப சுலபமான, சுவையான இனிப்பு பணியாரம் நைவேத்தியம் படைக்க தயாராகி விட்டது. இந்த பணியாரம் கிருஷ்ணருக்கு மட்டுமல்லாமல், முருகனுக்கும் கார்த்திகையில் நாட்களில் படைப்பது உண்டு. எனவே இதற்கு கார்த்திகை பணியாரம் என்கிற பெயரும் உண்டு. பக்தியோடு இந்த அப்பத்தை செய்து இறைவனுடைய அருளை அனைவரும் பெற்றுக் கொள்ளலாமே!