திருநெல்வேலி பக்கம் இந்த சொதி குழம்பு மிகவும் பிரபலமானது. குறிப்பாக ஆப்பத்திற்கு இந்த குழம்பை தொட்டு சாப்பிட மிக மிக அருமையாக இருக்கும். இது தவிர இட்லி தோசை சுடச்சுட சாதத்தில் போட்டு இந்த சொதி குழம்பை சாப்பிடலாம். பாரம்பரியம் மிக்க இந்த சொதி குழம்பை பக்குவமான முறையில் சுலபமாக எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

முதலில் கேரட் – 2, பீன்ஸ் – 10, மீடியம் சைஸில் இருக்கும் உருளைக்கிழங்கு – 1, முருங்கைக்காய் – 1 இந்த காய்கறிகளை எல்லாம் அவியலுக்கு வெட்டுவது போல கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெட்டிய இந்த காய்கறிகளுடன் ஒரு கைப்பிடி அளவு பச்சை பட்டாணியை போட்டு முக்கால் பாகம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வேக வைத்த காய்கறிகள் அப்படியே இருக்கட்டும்.
2 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து மசித்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

ஒரு தேங்காயை உடைத்து துருவி அந்த தேங்காயிலிருந்து தேங்காய் பால் எடுக்க வேண்டும். முதலில் எடுத்த தேங்காய் பால் திக்காக இருக்கும். 250ml திக்கான தேங்காய்ப்பால் முதலில் எடுத்து தனியாக வைத்து விடுங்கள். அதன் பின்பு இரண்டாவதாக எடுக்கப்படும் தேங்காய்ப்பாலை 500ml அளவு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.
கொஞ்சம் பெரிய துண்டு இஞ்சி, பச்சைமிளகாய் 4 கிலிருந்து 5 உங்களுடைய காரத்திற்கு ஏற்ப இந்த பொருட்களையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்து இதையும் அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (இந்த குழம்புக்கு இஞ்சி பச்சை மிளகாய் வாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும்.)

இப்போது சொதி குழம்பு தாளிக்க செல்லலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சின்ன வெங்காயம் தோலுரித்து – 10 பல், இந்த பொருட்களை சேர்த்து வெங்காயம் நன்றாக வதங்கும் வரை வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் வதங்கி வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பச்சை மிளகாய் விழுதை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன், சேர்த்து வேக வைத்த காய்கறிகளை போட்டு 1 நிமிடம் எண்ணெயில் வதக்கி விட்டு, இரண்டாவதாக எடுத்த கொஞ்சம் தண்ணீராக இருக்கக்கூடிய தேங்காய்ப்பால் 500ml கடாயில் ஊற்றி, 5 நிமிடம் போல நன்றாக கொதிக்கவிடுங்கள்.

தேங்காய் பால் கொதித்து சுண்டி வரும்போது வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பை கடாயில் ஊற்றி கொள்ளவேண்டும். அடுத்த படியாக குழம்புக்கு தேவையான அளவு உப்பை போட்டு, குழம்பை நன்றாக கலந்து விட்டு, 2 நிமிடம் கொதிக்க விட்டு, இறுதியாக திக்காக இருக்கும் தேங்காய் பாலை ஊற்றி இலேசாக கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, 1/2 ஸ்பூன் அளவு எலுமிச்சை பழச்சாறை ஊற்றி, கொத்தமல்லி தழைகளைத் தூவி, கலந்து பரிமாறினால் சூப்பரான திருநெல்வேலி ஸ்டைல் சொதி குழம்பு தயார். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா. உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.