காய்கறிகள் என்றாலே குழந்தைகள் அலறி அடித்து ஓடி விடுவார்கள். ஆனால் பெற்றோர்களுக்கு கவலை அதிகமாக இருக்கும். சிறிதளவு காய்கறிகளையாவது குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று. இவ்வாறான குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும். அவ்வாறு உடம்பில் நீர்ச்சத்து அதிகமாக கொடுக்கக்கூடிய சுரைக்காயில் இந்த சுவையான குழம்பை செய்து கொடுத்துப் பாருங்கள். இதனை இட்லி, தோசையுடன் அல்லது சாதத்துடன் சேர்த்துக் கொடுக்கலாம். இதனை சமைக்கும் பொழுது உங்கள் வீட்டிலுள்ளவர்கள் உங்களிடம் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். இன்னைக்கு என்ன உணவு சமைக்கிறார்கள் என்று. அவ்வாறு இதன் சுவையும் மிகவும் அற்புதமாகவே இருக்கும். ஒரு முறை இதனை செய்து பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சுரைக்காய் – 1, தனியா – 2 ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், கிராம்பு – 3, பட்டை சிறிய துண்டு – 2, ஏலக்காய் – 1, வர மிளகாய் – 4, தேங்காய் – 2 சில்லு, கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து= கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் அடுப்பின் மீது ஒரு குக்கரை வைத்து, குக்கர் நன்றாக காய்ந்ததும் தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் வரமிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் இரண்டு சில்லு தேங்காயை பொடியாக நறுக்கி சேர்த்து, ஒருமுறை வதக்கிவிட்டு, இவற்றை வேறு ஒரு தட்டிற்கு மாற்றி வைக்க வேண்டும். பின்னர் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு சுரைக்காயையும் அதன் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் சதைப் பற்றுள்ள பகுதியையும் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது குக்கரை வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு, பின்னர் நறுக்கி வைத்துள்ள சுரைக்காய் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை இவற்றுடன் சேர்த்து இரண்டரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு முறை நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து கொத்தமல்லி தழையை தூவி விட சுவையான சுரைக்காய் குழம்பு தயாராகிவிடும்.