ஆந்திரா பக்கம் ரோட்டு கடைகளில் பிரபல்யமாக கிடைக்கும் ஒரு ஸ்நாக்ஸ் தான் புனுகுலு. நாம எப்படி சாயங்கால நேரத்தில் பஜ்ஜி போண்டா சாப்பிடுவோம். அதேபோல் ஆந்திரா பக்கம் இந்த புனுகுலு ரோட்டு கடைகளில் சுலபமாக கிடைக்கும். நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை சுலபமாக செய்து விடலாம். புனுகுலுவுக்கு தொட்டுக்கொள்ள சுவையான காரசாரமான தக்காளி சட்னி, பச்சை மிளகாய் சட்னி, காரச் சட்னி, எதை வேண்டுமென்றாலும் சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்.
முதலில் ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மைதா – 1 1/2 கப், தயிர் – 1 கப், சீரகம் – 1 ஸ்பூன், பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை போட்டு முதலில் நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு 1/4 கப் அளவு தண்ணீரை மட்டும் ஊற்றி, மாவை நன்றாக கரைத்தால் சரியாக இருக்கும். மாவு இட்லி மாவு போல கெட்டியாக இருக்க வேண்டும்.
இந்த 1 1/2 கப் அளவு மைதா மாவுக்கு 1 கப் தயிர், 1/4 கப் தண்ணீர் சரியான அளவாக இருக்கும். சில மைதா அதிக தண்ணீர் உறிஞ்சும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கரைத்த இந்த மாவை மூடி போட்டு 3 மணி நேரம் நன்றாக புளிக்க வைக்க வேண்டும். மாவு நன்றாக பளித்த பின்பு உங்கள் கையை கொண்டு மாவை 10 நிமிடம் போல கலந்து கொடுத்தால், புசுபுசுவென மாவு பிளஃபியாக கிடைக்கும். (புளித்த தயிர் ஆக இருந்தால், மாவு புளிக்க வைக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.)
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடு செய்து கொள்ள வேண்டும். தயாராக புளித்த மாவில் இருந்து சிறிய சிறிய உருண்டைகளாக அப்படியே எடுத்து போண்டா போல எண்ணெயில் போட்டு பொன்னிறம் வரும் வரை சுட்டு எடுத்தால் சூப்பரான புனுகுலு தயார். (நாம தமிழ்நாட்டில் போண்டா சுடுவது போலவே தான், இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக எண்ணெயில் விட்டு பொரித்து எடுக்க வேண்டும்.)
இப்போது இதற்கு தொட்டுக்கொள்ள காரச் சட்னி ரெசிபி. அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் வரமல்லி – 1 ஸ்பூன், வரமிளகாய் – 6, மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1, மீடியம் சைஸ் இருக்கும் தக்காளிப்பழம் – 2, இந்த பொருட்களை சேர்த்து தக்காளி பழம் நன்றாக வேகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். 2 நிமிடம் தக்காளி பழங்களை வதக்கி விட்டு, ஒரு மூடி போட்டு வைத்துவிட்டால் போதும். தக்காளி பழம் சீக்கிரம் வெந்துவிடும்.
இறுதியாக 2 கொத்து கறிவேப்பிலை, தோலுரித்த பூண்டு – 2 பல், தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை போட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும். இந்த விழுது நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸியில் போட்டு அரைத்து, சட்னியை மிக்ஸி ஜாரில் இருந்து வேறொரு கிண்ணத்தில் மாற்றி, நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயம், சேர்த்து தாளித்து போட்டால் சூப்பரான காரச் சட்னி தயார். தயார் செய்த சுட சுட புனுகுலு உடன் இந்த சட்னியை வைத்து பரிமாறுங்கள். பர்ஃபெக்ட்டான சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் தயார்.