- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கறி பிரியாணியை மிஞ்சும் சுவையில் 'கத்திரிக்காய் பிரியாணி' உதிரி உதிரியாக இவ்வளவு சுலபமா செய்யலாமா? இது...

கறி பிரியாணியை மிஞ்சும் சுவையில் ‘கத்திரிக்காய் பிரியாணி’ உதிரி உதிரியாக இவ்வளவு சுலபமா செய்யலாமா? இது தெரிஞ்சா அடிக்கடி செஞ்சிருப்போமே!

- Advertisement -

அசைவ பிரியாணியின் சுவையை மிஞ்சும் ஒரு சைவ பிரியாணி என்றால் அது ‘கத்தரிக்காய் பிரியாணி’ என்று கூறலாம். மஷ்ரூம் பிரியாணியை விட அசத்தலான சுவையை கொடுக்கக்கூடிய இந்த கத்திரிக்காய் பிரியாணியை இவ்வளவு சுலபமாக செய்ய முடியும் என்று தெரிந்திருந்தால், அடிக்கடி செஞ்சு இருப்பீங்க! இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போய்விடவில்லை.. இதே முறையில் நீங்களும் ஒருமுறை கத்தரிக்காய் பிரியாணி செஞ்சு பாருங்க, உங்களுக்கும் ரொம்பவே பிடித்துப் போய்விடும். அசத்தலான சுவையில் சுலபமாக கத்தரிக்காய் பிரியாணி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கத்திரிக்காய் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 100 கிராம், நெய் – 2 டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு – 15, பெரிய வெங்காயம் – ஒன்று, பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, கல்பாசி, அன்னாசிப்பூ – தலா 2, இஞ்சி, பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், புதினா, மல்லித்தழை – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 2, பெரிய தக்காளி – ஒன்று, பாஸ்மதி அரிசி – 200 கிராம், உப்பு – தேவைக்கு ஏற்ப, தயிர் – 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத் தூள் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

கத்திரிக்காய் பிரியாணி செய்முறை விளக்கம்:
முதலில் கத்திரிக்காயில் சிறிய அளவிலான கத்தரிக்காய்களை தேர்ந்து எடுக்க வேண்டும். அதாவது முதிர்ந்த கத்திரிக்காயாக இல்லாமல், பிஞ்சு கத்தரிக்காயாக இருக்க வேண்டும். அப்போது தான் பிரியாணி ரொம்பவே சூப்பராக வரும். பிஞ்சு கத்தரிக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து அதன் காம்பு பகுதியை நீக்காமல் அடிப்பகுதியிலிருந்து நான்காக முக்கால் பாகம் உள்ளே செல்லும் அளவிற்கு வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். கத்திரிக்காய் கறுத்துப் போகாமல் இருக்க தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அல்லது தேவைப்படும் நேரத்தில் வெட்டிக் கொள்ளலாம். ஒரு ஆழாக்கு பாஸ்மதி அரிசியை எடுத்து சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, கல்பாசி, அன்னாசிப்பூ ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். இதனுடன் முந்திரி பருப்புகளை உங்கள் தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக சுருள வதக்கி வரும் பொழுது புதினா மற்றும் மல்லித் தழை ஒரு கைப்பிடி அளவிற்கு நறுக்கி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு பேஸ்ட், 2 பச்சை மிளகாய்கள் சேர்த்து நன்கு வதக்குங்கள். இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்கியதும் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

தக்காளி பாதி அளவிற்கு வெந்து வரும் பொழுது கத்தரிக்காய்களை நான்காக வெட்டி முழு கத்தரிக்காய்களை காம்புடன் சேர்க்க வேண்டும். தக்காளி மற்றும் கத்தரிக்காய் சுருள வதக்கி வரும் பொழுது தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது மூடி வைத்து 2 நிமிடம் கழித்து திறந்து கலந்து விட்டால், அனைத்தும் மசிய, பச்சை வாசம் போக நன்கு எண்ணெய் தெளிய மேலே வெந்திருக்கும். அரிசி அளந்த அதே அளவையில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஆழாக்கு பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் சரியாக இருக்கும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள்.

தண்ணீர் கொதித்து வந்ததும் ஊற வைத்த அரிசியை இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். அரிசியுடன் தண்ணீர் சேர்த்து கொதித்து வந்ததும் இரண்டு நிமிடம் மூடியை போட்டு மூடி விடுங்கள். தண்ணீர் வற்றி பாதி அளவிற்கு சுண்டியதும், அடுப்பின் அளவை மிகவும் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை நன்கு கிளறிக் கொடுத்து சமன் செய்து கொள்ளுங்கள். பின்னர் மூடியை மூடி குறைந்த தீயிலேயே 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும். காற்று வெளியில் செல்லாதவாறு தம் பிடிக்க வெயிட் வைத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். மேலும் பத்து நிமிடம் அந்த அனலின் சூட்டிலேயே அப்படியே இருக்க விடுங்கள். அதன் பிறகு திறந்து பார்த்தால் அற்புதமான சுவையில் உதிரி உதிரியான கத்தரிக்காய் பிரியாணி தயாராகியிருக்கும். இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

சற்று முன்