வடை என்றாலே பொதுவாக உளுத்த மாவில் செய்யும் வடை, கடலை மாவில் செய்யும் வடை இவற்றை தான் அதிகமாக அனைவரது வீட்டிலும் செய்கின்றனர். ஆனால் கோவில்களுக்கு சென்றால் மட்டும் தான் அங்கு உளுத்தம் வடை சற்று கடமுட வென, வாயில் வைத்து கடித்து சாப்பிடும் வகையில் காரசாரமாக இருக்கும். இந்த வடையில் மிளகு, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்துள்ளதால் அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் இதுபோன்ற வடையை எவரும் வீட்டில் செய்வதில்லை. இந்த வடை செய்வதற்கு நேரமும் குறைவாகத் தான் செலவாகும். இதனையும் வீட்டில் ஈசியாக செய்து சாப்பிடலாம். ஒரு முறை இதனை செய்து விட்டால் மீண்டும் அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். இந்த உளுந்து வடையை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு – ஒரு கப், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் – 200 கிராம்.
செய்முறை:
முதலில் ஒரு கப் உளுத்தம் பருப்பை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனை இரண்டு, மூன்று முறை தண்ணீர் சேர்த்து நன்றாகக் கழுவி, மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இவை நன்றாக ஊறியதும் அதிலுள்ள தண்ணீரை வடித்து, உளுத்தம்பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.
பின்னர் உளுத்தம் பருப்பை முழுமையாக மாவு போன்று அரைக்காமல், 80 சதவீதம் மாவு பக்குவத்தில் அரைக்க வேண்டும். அதாவது கொஞ்சம் உளுத்தம்பருப்பு ஆங்காங்கு கொரகொரப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு உளுத்தம் பருப்பு அரைக்கும் போது சிறிதளவு கூட தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் மிளகையும் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள உளுத்த மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் பொடி செய்த மிளகு தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் பிறகு இதனுடன் அரை டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்துவிட வேண்டும்.
பிறகு ஒரு வாழை இலை அல்லது பால் பாக்கெட் கவரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் மீது லேசாக எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு கலந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு சிறு உருண்டையாக எடுத்து, வாழை இலையில் வைத்து மெல்லியதாக வடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அதன் நடுவே விரலை வைத்து ஒரு ஓட்டை போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் தட்டிய வடையை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.