தினமும் சாம்பார், காரக்குழம்பு, ரசம் என்று மாறி மாறி செய்வதுண்டு. ஆனால் ஒரு சில நேரங்களில் வேலை அதிகமாக இருக்கின்ற பொழுதும், திடீரென வெளியில் செல்ல வேண்டியிருந்தாலும் அவசர அவசரமாக ஏதாவது குழம்பு வைக்க வேண்டியிருக்கும். அப்பொழுது தயிர் இருந்தால் அதனை கடைந்து தாளித்து மோர் குழம்பு செய்து விடலாம். ஆனால் இதில் மசாலா சேர்த்து செய்யும் பொழுதுதான் மோர்க்குழம்பு அற்புதமான சுவையில் இருக்கும். அதற்கு நினைத்த உடனே சுவையான மசாலா மோர் குழம்பு செய்வதற்கு இந்த இன்ஸ்டன்ட் மோர் குழம்பு பவுடரை வீட்டில் தயார் செய்து வைத்துக்கொண்டால் போதும். நீங்கள் ஐந்தே நிமிடத்தில் இந்த மோர்க்குழம்பை சட்டென செய்துவிட முடியும். இந்த மோர்க்குழம்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தட்டாமல் விரும்பி சாப்பிடுபவர்கள். எனவே நீங்கள் வெளியில் செல்லும் பொழுது அவசர அவசரமாக யோசித்து செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. வாருங்கள் இந்த சுவையான மோர் குழம்பு மிக்ட்சரை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – இரண்டு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், தனியா – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பச்சைமிளகாய் – 3, வெந்தயம் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், வெந்தயம் இவை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே கடாயில் வரமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றிலிருக்கும் ஈரத்தன்மை அனைத்தும் அகன்று, தேங்காய் துருவல் முழுவதுமாக பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனையும் அதே தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பிறகு அதே கடாயில் அரை ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் கடுகு மற்றும் கருவேப்பிலையை வேறு தட்டில் தனியாக வைக்க வேண்டும். பின்னர் கடுகு, கறிவேப்பிலை இவற்றை தவிர மற்ற அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் கடுகு, கருவேப்பிலை, உப்பு, அரிசி மாவு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் இவை அனைத்தையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.மோர்
குழம்பு செய்யும் முறை:
அடுப்பின் மீது கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மோர் குழம்பு மசாலாவை 2 ஸ்பூன் எடுத்து, ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை கடாயில் ஊற்றி நன்றாக வதக்கவேண்டும். பின்னர் இதனுடன் கரைத்து வைத்துள்ள ஒரு கப் தயிர் மற்றும் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும். இறுதியாக உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டால் சுவையான மோர் குழம்பு தயாராகிவிடும்.