இப்பொழுது குழந்தைகள் முதலே இளநரை என்பது வந்து விடுகிறது. முன்பெல்லாம் நாற்பது வயதை கடந்த பிறகு தான் ஒவ்வொரு முடியாக நரைக்க ஆரம்பிக்கும். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு விட்டமின் குறைபாடு காரணமாக இளம் வயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. இவற்றை எந்தவித ஷாம்பு சேர்த்தாலும் சரி செய்ய முடியாது. மருத்துவமனைக்குச் சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் தேவையில்லாத உடல் உபாதைகளுக்கு ஆளாக வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாகவும், இளநரையை கருமையாக்க கூடியதுமான இந்த ஒரு ஹேர் டை பவுடரை நீங்கள் ஒரு முறை தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். தேவைப்படும் நேரத்தில் எல்லாம் சுலபமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் எந்தவித உடல் பாதிப்புகளும் ஏற்படாது. அதுமட்டுமல்லாமல் முடி உதிர்வையும் குறைக்கிறது. இந்த பவுடரை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நாம் உண்ணும் உணவு முதல் அவற்றில் பயன்படுத்தும் காய்கறிகளும், காய்கறிகளில் தேவையான சதைப்பற்றும், தேவையில்லை என்று நாம் தூக்கி எறியும் அதன் தோலும் மருத்துவ குணம் வாய்ந்ததாகவே இருக்கிறது. அவ்வாறு பீர்க்கங்காய், சுரைக்காய் இவற்றின் தோலை வைத்து துவையல் அரைக்கலாம்.
அதேபோல் கீரையின் இலை பகுதிகளை பயன்படுத்திவிட்டு, தூக்கி எறியும் காம்பு பகுதியை வைத்து சூப் செய்யலாம், கூட்டு செய்யலாம். இவ்வாறு நமது உணவில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதை போலவே வாழைப்பூவின் மேல் இருக்கின்ற தோலைத் தூக்கி எறிவது அனைவரின் வழக்கம். அதனை எதற்கும் பயன்படாது என்று தான் நாம் நினைத்துள்ளோம்.
இவ்வாறு எதற்கும் பயன்படாது என்று நாம் தூக்கி எறியும் இந்த வாழைப்பூவின் தோலை வைத்து தான் இந்த ஹேர் டை பவுடரை தயார் செய்யப் போகிறோம். அதற்கு முதலில் 6 வாழைப் பூ இதழ்களை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அவற்றை சுத்தமாக தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு இரும்பு கடாய் வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் வாழைப்பூவை பொடியாக நறுக்கிக் கொண்டு, அதனை இரும்பு கடாயில் சேர்த்து, அடுப்பின் தீயை அதிகமாக வைத்து, வாழை பூ இதழை நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். இவை நன்றாக கருகி கருப்பாக மாறும் வரை வறுக்க வேண்டும். பின்னர் இதனை ஒரு தட்டிற்கு மாற்றி, நன்றாக ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைக்க வேண்டும்.பிறகு இதனை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளலாம்.
உபயோகப்படுத்தும் நேரத்தில் ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் வைத்து, அதில் 4 கிராம்பு சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். இந்த தண்ணீர் கால் டம்ளர் அளவு வருகின்ற வரை கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள அந்த பவுடரில் ஒரு ஸ்பூன் பவுடரை எடுத்து, அதனுடன் இந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பேஸ்டாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தலைக்கு குளித்து ஆறவைத்த முடியில் இந்த பேஸ்டை தடவி சிறிது நேரம் உலர வைத்தால் போதும். உங்கள் முடி கருமையாக மாறிவிடும். இதனை தடவியதும் தலையை அலச வேண்டும் என்ற அவசியம் கிடையாது.