- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சுடச்சுட சாதத்தில் இந்த துவையலை போட்டு சாப்பிட்டு பாருங்க. ரசம் சாம்பார் எல்லாமே, இந்த துவையல்...

சுடச்சுட சாதத்தில் இந்த துவையலை போட்டு சாப்பிட்டு பாருங்க. ரசம் சாம்பார் எல்லாமே, இந்த துவையல் சுவையில் தோற்றுப் போகும்.

- Advertisement -

சுடச்சுட சாதத்தில் ரசம் சாம்பார் போட்டு சாப்பிடுவதை விட இந்த துவையலை போட்டு பிசைந்து சாப்பிட்டால் ஒரு குண்டான் சோறு வயிற்றுக்குள் இறங்குவதே தெரியாது பாத்துக்கோங்க. அந்த அளவுக்கு சுவை நிறைந்த ஆரோக்கியம் நிறைந்த வித்தியாசமான ஒரு துவையல் ரெசிபியை சுலபமாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா. சுட சுட சாதத்திற்கு மட்டும்தானா இட்லி தோசை சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்பிடலாம்.

பின் சொல்லக்கூடிய பொருட்களை எல்லாம் மொத்தமாக கடாயில் போட்டு வறுக்க கூடாது. குறிப்பில் கூறப்பட்டுள்ளது போலவே ஒவ்வொரு பொருட்களாக கடாயில் சேர்த்து வரிசையாக சரியான முறையில் வறுத்து எடுத்துக் கொண்டால் மட்டுமே துவையல் சுவை மணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு முதலில் நன்றாக ஊறவைத்து விடுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து விட்டு அந்த கடாயை சூடு செய்து கொள்ளவேண்டும். கடாய் சூடானதும் வேர்கடலை – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபில் ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு வறுக்க வேண்டும். இந்த மூன்று பொருட்களும் பாதி வறுபட்ட உடன் வர மல்லி – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களை போட்டு இரண்டு வதக்கு வதக்கி விட்டு, அடுத்து உடனடியாக வெந்தயம் – 1/4 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, வர மிளகாய் – 4, தோலுரித்த பூண்டு – 5 பல், சேர்த்து மீண்டும் எல்லா பொருட்களையும் சேர்த்து வறுக்க வேண்டும்.

- Advertisement -

எல்லாம் சமமாக வாசம் வரும் வரை வறுபடட்டும் அடுத்து, எள்ளு – 1/2 ஸ்பூன் சேர்த்து, படபடவென பொரியும் அளவிற்கு வறுத்து, தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து, மீண்டும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். தேங்காய் நிறைய சேர்க்க கூடாது. அப்புறம் தேங்காய் சட்னி மாதிரி மாறிவிடும்.

அவ்வளவு தான். வறுபட்ட பொருட்களை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். ஆறிய பின்பு இந்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு முதலில் பொடி செய்து விடுங்கள். அதன் பின்பு ஊற வைத்திருக்கும் புளியை தண்ணீரோடு இந்த மிக்ஸி ஜாரில் ஊற்ற மீண்டும்.

நாம் வறுத்த மசாலா பொருட்கள், புளி எல்லாம் சேர்ந்து அரைபட்டு துவையல் பக்குவத்திற்கு நமக்கு கிடைக்கும். சட்னியை தண்ணீராக அரைத்து விடாதீர்கள். துவையல் போல கொரகொரப்பாக 90% வரை அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். இதோடு கொஞ்சம் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயத்தை போட்டு கலந்து விட்டு சுடச்சுட சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் அத்தனை ருசி போங்க.

உங்களுக்கு நெய் பிடிக்காது என்றால் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். ஆனால் சாதம் வடித்த உடன் எடுத்த சூடு சாதகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் துவையல் அருமையான வாசத்தில் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா நாளைக்கு இந்த சட்னியை ட்ரை பண்ணி பாருங்க. உடலுக்கு இந்த சட்னி ஆரோக்கியமும் கூட தாங்க.

சற்று முன்