வீட்டில் போரடிக்கும் நேரத்தில் ஏதேனும் சூடாக சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், திடீரென வீட்டிற்கு விருந்தாளிகள் வருவதாக இருந்தாலும் அவர்களுக்கு சாப்பிட கொடுக்க உடனடியாக ஏதாவது பலகாரம் செய்ய வேண்டியிருக்கும். அது போன்ற அவசர நேரங்களில் அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய பொட்டுக்கடலை வைத்து இப்படி சுவையான வடை செய்து கொடுக்கலாம். இந்த வடையை ருசிப்பவர்களுக்கும் தெரியாது இதனை பொட்டுக்கடலையில் தான் செய்திருக்கிறோம் என்று. சாப்பிடுவதற்கு அப்படியே மசால் வடை போன்ற அசத்தலான சுவையில் இருக்கும். இதனை ஒருமுறை சுவைத்தவர்கள் செய்த உங்களை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். வாருங்கள் இப்படி சுவையான பொட்டுக்கடலை வடையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, வர மிளகாய் – 2, பூண்டு – 6 பல், சோம்பு – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், காரட் – 1, பீட்ரூட் சிறியது – 1, எண்ணெய் – கால் லிட்டர், கறிவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு பீட்ரூட் மற்றும் கேரட்டை தேங்காய் துருவலில் வைத்துப் பொடியாக துருவி வைக்க வேண்டும். அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதில் ஒரு கப் பொட்டுக்கடலை, அரை ஸ்பூன் சோம்பு, 2 வரமிளகாய் மற்றும் 6 பல் பூண்டு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்த இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து கலந்து விட வேண்டும்.
பிறகு துருவி வைத்துள்ள கேரட் மற்றும் பீட்ரூட் இவற்றையும் இதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். அதன்பின் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்ட பிறகு, இதனுடன் லேசாக தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவு வடை பிடிக்கும் பதத்திற்க்கு வந்தவுடன் மாவு பிசைவதை நிறுத்தி விட வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.
பிறகு கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடாகும் நேரத்திற்குள் கலந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு சிறு உருண்டையாக எடுத்து வடை போன்று தட்டி வைக்க வேண்டும். அதன்பின் எண்ணெய் சூடானதும் ஒவ்வொரு வடையாக எடுத்து எண்ணெயில் போட வேண்டும். வடை நன்றாக சிவந்து பொரிந்து வந்ததும், ஒவ்வொன்றாக வெளியே எடுத்து சுடச்சுட சாப்பிட கொடுத்தால் போதும். நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு இந்த வடை மொறுமொறுவென சூப்பரான சுவையில் இருக்கும்.