இப்பொழுதெல்லாம் மனிதனின் உடல் எவ்வித நோய் தாக்குதலுக்கும் உடனே ஆட்பட்டு விடுகிறது. அந்த அளவிற்கு மனிதனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது. சாதாரணமாகவே இன்றைய சூழ்நிலை மனிதனுக்கு ஏதுவாக இருப்பதில்லை. அதில் இப்பொழுது நோய்த்தொற்று வேறு அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. எனவே மனிதனின் உடல் இன்னும் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வேண்டும். இதற்கு நாம் உண்ணும் உணவின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். அவ்வாறு என்ன சாப்பிட்டால் உடனே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்துகொண்டிருக்கும். எதையும் சாப்பிட்ட உடனேயே அதன் பலன் தெரிவதில்லை. அது நமது உடலில் ஊர ஊர தான் அதற்கான பலன் கிடைக்கிறது. அவ்வாறு வேப்பமரத்தின் அனைத்து பாகங்கள் நமக்கு பயனுள்ள மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. வேப்பமரத்தில் கிடைக்கக்கூடிய வேப்பம்பூவை பறித்து ரசம் வைத்து சாப்பிட்டால் சட்டென நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாருங்கள் இந்த வேப்பம் பூ ரசத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
புளி – எலுமிச்சை பழ அளவு, தக்காளி – 2, மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், பூண்டு – 6 பல், வர மிளகாய் – 5, கடுகு – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், வேப்பம் பூ – ஒரு கொத்து, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் எலுமிச்சை அளவு புளியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். பின்னர் அதனை கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரை தக்காளி பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஒன்னரை தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 6 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் நான்கு வரமிளகாயை சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து கொள்ள வேண்டும். பிறகு அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இரண்டு வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு எடுத்து வைத்துள்ள வேப்பம்பூவை தண்ணீரில் சுத்தமாக கழுவி எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு புளி தண்ணீரில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை கடாயில் சேர்த்து= ஒரு கொதி வர ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை அனைத்துவிட வேண்டும்.