ஒரு சில பெண்கள் காலையில் கண் விழிப்பதே சமையலறையாகத் தான் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது இன்று என்ன சமைக்கலாம்? என்று கேள்வி பலருக்கும் இருந்து கொண்டிருக்கும். அளவு பார்த்து பார்த்து சமைத்தாலும் ஒரு சில நேரங்களில் செய்யும் உணவுகள் வீணாகிவிடுகிறது. அதுபோல இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை அரைத்துவைக்கும் இட்லி மாவில் சிறிதளவு மீதமாகிவிடும். இதனை என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு சிலர் கீழே கொட்டி விடுவார்கள். ஆனால் இதனை வீணாக்காமல் ஒரு உணவு வகையை இவ்வாறு செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். மீதியான மாவு சற்று புளிப்புச் சுவையுடன் இருக்கும். அதற்கு இது போன்ற பொருட்களை சேர்த்து தாளித்து, பொங்கனம் செய்து கொடுத்தால் அவ்வளவு சூப்பராக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான பொங்கனத்தை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
மீந்துபோன இட்லி மாவு – ஒரு கப், ரவை – 2 ஸ்பூன், மைதா மாவு – 4 ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், தயிர் – 2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், வர மிளகாய் – 2, உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் மைதா மாவு, 2 ஸ்பூன் ரவை மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் முக்கால் ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனை மீதமான இட்லி மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பைப் பற்ற வைத்து, அதன் மேல் ஒரு சிறிய கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கடாய் நன்றாக சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
கடுகு பொரிந்தவுடன் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் இந்த தாளிப்பை கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பின் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து, கலந்து வைத்துள்ள மாவிலிருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து, நடுவில் கனமாகவும், அதனை சுற்றி மெல்லியதாக இருக்கும்படியும் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் இதன் மீது ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் இதனை திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பொங்கனம் தயாராகிவிட்டது.