நூடுல்ஸ் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகையாகும். சில நேரங்களில் அலுப்பாக இருக்கும் பொழுது சமைக்க முடியாமல் போனால் ஒரு பாக்கெட் நூடுல்ஸ் வாங்கி சமைத்து கொடுத்தால் போதும், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி என்றாவது ஒருநாள் பாக்கெட்டுகளில் விற்கப்படும் நூடுல்ஸை சமைத்துக் கொடுக்கலாம். ஆனால் அடிக்கடி இதனை செய்து கொடுத்து, குழந்தைகளை பழக்கி விட கூடாது. அது அவர்கள் உடல் நலத்திற்கு நன்மை கிடையாது. அவ்வாறு ஆரோக்கியமான உணவுகளான சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளை வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. அப்படி சப்பாத்தி செய்யும் பொழுது அது ஒரு சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக இருந்தால், மீதியாகிவிடும். இந்த மீந்துபோன சப்பாத்தியில் இப்படி சுவையான உணவை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும், அவர்களுக்குப் பிடித்த உணவாகவும் இருக்கும். வாருங்கள் இந்த சப்பாத்தி நூடுல்ஸை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி – 5, குடை மிளகாய் – 1/2, முட்டை கோஸ் – அரை கப், எண்ணெய் – 2 ஸ்பூன், வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மிளகு தூள் – அரை ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு ஸ்பூன், டொமேட்டோ சாஸ் – ஒரு ஸ்பூன்.
செய்முறை:
முதலில் முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு குடை மிளகாயை நீளமாக வெட்டி வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு கேரட்டை பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஐந்து சப்பாத்தியை நீளமான துண்டுகளாக மெல்லிய வடிவில் வெட்டி வைக்க வேண்டும். இறுதியாக வெங்காயம் மற்றும் இரண்டு பச்சை மிளகாயை நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வெட்டி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள முட்டை கோசை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் சோயா சாஸ் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு நீளத் துண்டுகளாக வெட்டி வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் இறுதியாக அரை ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவு தான் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் தயாராகிவிட்டது.