கீரை என்று சொன்னாலே அது பலருக்கும் கசப்பான உணவாக தான் இருக்கிறது. ஆனால் பலரும் ஒதுக்கி வைக்கின்ற இந்த கீரையில் தான் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது முருங்கைக்கீரையில் தான். இவ்வாறு எப்பொழுதும் கீரை பொரியல் என்று சொன்னாலே வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு முட்டை பொரியலுடன் கீரையை சேர்த்து சமைத்து கொடுத்து பாருங்கள். இதன் டேஸ்டான சுவைக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த முருங்கைக் கீரையுடன் முட்டை சேர்த்து எப்படி சுவையான பொரியல் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். இதனை சூடான சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை – ஒரு கட்டு, வெங்காயம் – 2, உளுத்தம்பருப்பு – கால் ஸ்பூன், கடலைப்பருப்பு – கால் ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், பூண்டு – 2 பல், முட்டை – 2, உப்பு – ஒரு ஸ்பூன், தேங்காய் துருவல் – 3 ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், மிளகு தூள் – அரை ஸ்பூன், வரமிளகாய் – 2.
செய்முறை:
முதலில் முருங்கைக் கீரையை உருவி, தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வர மிளகாயை இரண்டு துண்டுகளாக கிள்ளி வைக்க வேண்டும். பின்னர் தேங்காயைத் துருவி வைக்க வேண்டும். அதேபோல் இரண்டு பல் பூண்டை யும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, அலசி வைத்துள்ள கீரையை சேர்க்க வேண்டும். அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வேக விட வேண்டும். கீரை முக்கால் பங்கு வெந்ததும் அதனை தனியாக எடுத்து வைக்க வேண்டும். பிறகு அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கால் ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் உளுந்து, கால் ஸ்பூன் கடலைப்பருப்பு மற்றும் இரண்டு வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். அதன்பிறகு இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும்.
பின்னர் இதனுடன் வேக வைத்துள்ள கீரையை சேர்த்து கலந்து விட வேண்டும். அதன் பிறகு துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் அரை ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சட்டென முருங்கைக்கீரை முட்டை பொரியல் தயாராகிவிட்டது. இதனை குழம்பு சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.