என்னதான் வீட்டில் பலவகையான உணவுகளை சமைத்துக் கொடுத்தாலும் கல்யாண விருந்தில் சாப்பிடும் உணவுகளுக்கு ஈடு இணை இருக்காது. நிறம், மணம், சுவை இவை மூன்றையும் கொண்டு வயிற்றை நிரப்புவதில் கல்யாண விருந்துக்கு ஈடாகஎதுவுமே இருக்க முடியாது. அதேபோல் கல்யாண வீட்டு விருந்தில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். அதில் முதலில் வைக்கப்படுவது இனிப்பு மட்டும்தான். இந்த இனிப்பை மட்டும் ருசித்து விட்டால் நம் மனது மிகவும் சந்தோஷமாக மாறிவிடும். அதற்காகத்தான் முதலில் இனிப்பை வைக்கின்றனர். இவ்வாறு கல்யாண வீட்டில் செய்யப்படும் இனிப்புகளில் மிகவும் ருசியான ஒன்று தான் இந்த அசோகா அல்வா. இது வாயில் வைத்தவுடனே கரைந்து விடும் அளவிற்கு அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். வாருங்கள் கல்யாண வீட்டின் சந்தோஷத்தை வீட்டிலும் கொண்டாட இந்த அசோகா அல்வாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு – 200 கிராம், கோதுமை மாவு – 200 கிராம், நெய் – 100 மில்லி, சர்க்கரை – 400 கிராம், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, ஏலக்காய் பொடி – அரை ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 15.
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மேல் ஒரு கடாயை வைத்து, 200 கிராம் பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும். பாசிப் பருப்பு நன்றாக சிவந்து வருபட்டதும், அதனை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் 3 அல்லது 4 கப் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பிறகு மறுபடியும் பாசிப் பருப்பு இருக்கும் பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து வேக வைக்க வேண்டும். பாசிப்பருப்பு நன்றாக வெந்ததும் அதனை ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து, 3 அல்லது 4 ஸ்பூன் நெய் சேர்த்து, 200 கிராம் கோதுமை மாவையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கோதுமை மாவை ஒரு தட்டிற்க்கு மாற்றிக்கொண்டு, அதே கடாயில் 400 கிராம் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கொதித்து ஒரு கம்பி பதம் வந்தவுடன் வறுத்து வைத்துள்ள கோதுமை மாவையும், அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பையும் சர்க்கரைப் பாகில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து இவை அனைத்தையும் கலந்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு இவற்றுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் கேசரி பவுடர் சேர்த்து கலந்து விடவேண்டும். இவற்றுடன் இடையிடையே கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலந்து கொண்டு வர வேண்டும். சிறிது நேரத்தில் அனைத்தும் கெட்டியாகி அல்வா பதத்திற்கு வந்தவுடன், இறுதியாக முந்திரிப்பருப்பை வறுத்து, சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும்.