காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் அவசர அவசரமாக வேலையை முடித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். எனவே குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுக்க மிகவும் சுவையான, சுலபமான உணவை செய்து கொடுக்க முடிவு செய்வார்கள். அவ்வாறு வீட்டில் காய்கறி இல்லை என்றாலும் ஒரு கட்டு புதினா இருந்தால் போதும். சுவையான புதினா புலாவ் செய்து விடலாம். இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சமைக்கும் பொழுதே இதன் வாசனை வீடு முழுவதும் பரவி, அனைவரின் பசியையும் தூண்ட ஆரம்பிக்கும். வாருங்கள் இந்த சுவையான புதினா புலாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – ஒரு கப், வெங்காயம் – 1, உருளைக்கிழங்கு – 1, தக்காளி சிறியது – ஒன்று, தேங்காய் துருவல் – 2 ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, புதினா – ஒரு கட்டு, இஞ்சி பூண்டு விழுது – 3ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – இரண்டு, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, நெய் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு கப் பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி, பின்னர் மறுபடியும் அதில் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து 20 நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சிறிய தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கட்டு புதினா இலைகளை சுத்தமாக தண்ணீரில் அலசி மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பிறகு அவற்றுடன் பச்சை மிளகாய், 2 ஸ்பூன் தேங்காய் துருவல் இவை அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் 2 ஏலக்காய், பட்டை, கிராம்பு இவை அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இதனுடன் 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றுடன் வெங்காயம் உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள புதினா விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இவற்றுடன் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீரில் என்ற அளவிற்கு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அவற்றுடன் உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் ஊறவைத்த அரிசியையும் சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வரும் வரை வேக வைத்தால் போதும், சுவையான புதினா புலாவ் தயாராகிவிடும்.