எப்பொழுது மதியம் சாதத்துடன் தொட்டுக் கொள்ள ஏதேனும் ஒரு பொரியல் செய்வது வழக்கம் தான். அவ்வாறு கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புடலங்காய், அவரைக்காய், பூசணிக்காய் போன்றவற்றை பொரியலாகவோ, கூட்டாகவோ செய்து வைக்கலாம். ஆனால் ஒரு சில காய்கறிகள் மட்டும்தான் ஒன்றுடன் மற்றொன்று சேர்த்து செய்யும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். அப்படி கேரட் மற்றும் பீன்ஸை எந்த காய்கறிகளுடன் வேண்டுமானாலும் சேர்த்து சமைக்கலாம். இவற்றை சேர்த்து செய்யும் பொழுது செய்யும் காய்கறியின் சுவையில் எந்தவித மாற்றமும் இருக்காது. இன்னும் கொஞ்சம் சுவை கூட தான் செய்யும். ஆனால் கேரட் மற்றும் பீன்ஸ் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் போது மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். எனவேதான் ஃப்ரைட் ரைஸ், பிரிஞ்சு, புலாவ் இது போன்ற உணவுகளில் கேரட், பீன்ஸ் இவை இரண்டுமே சேர்க்கப்படுகிறது. வாருங்கள் இந்த சுவையான கேரட், பீன்ஸ் பொரியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கேரட் – 100 கிராம், பீன்ஸ் – 100 கிராம், வெங்காயம் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, எண்ணெய் – 2 ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் கேரட் மற்றும் பீன்ஸை தண்ணீரில் அலசிக் கொண்டு, அவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். அதன்பிறகு இரண்டு காய்ந்த மிளகாயைக் காம்பு கிள்ளி விட்டு, அவற்றை இரண்டாக உடைத்து வைக்க வேண்டும்.
பிறகு இரண்டு சில்லு தேங்காயை காய் துருவல் பயன்படுத்தி பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
கடுகு பொரிந்தவுடன் அதில் அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் கில்லி வைத்துள்ள இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ் இவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு காய்கறிகளுடன் அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு, தட்டு போட்டு மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவேண்டும். சிறிது நேரத்தில் காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து, ஒருமுறை கிளறி விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.