நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறையாவது ஆரோக்கியமான உணவுகள் பெரும்பாலும் உளுத்தம்பருப்பு, உளுந்தங் கஞ்சி, உளுந்தங்களி போன்ற பல்வேறு உணவுகளை உளுந்து வைத்து செய்து கொடுப்பார்கள். உளுந்தை உணவாக சாப்பிட எடுத்துக்கொண்டால் அதன் மூலம் எலும்புகள் வலுப்படும். அதிலும் பெண் குழந்தைகளுக்கு இடுப்பு எலும்பு வலுப்படுவதற்கு இந்த உளுந்து பெரிதும் துணை புரிகிறது. ஆனால் இப்பொழுது இவ்வாறு செய்து கொடுக்க எவருக்கும் நேரம் இருப்பதில்லை. ஆகவே சட்டென செய்யக்கூடிய இந்த உளுந்து சட்னி என்பது அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்வது அனைவருக்கும் நல்லது. இதன் சுவை இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். வாருங்கள் இந்த உளுத்தம்பருப்பு சட்னியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, சின்ன வெங்காயம் – ஐந்து, தக்காளி சிறியது – ஒன்று, உளுத்தம்பருப்பு – 4 ஸ்பூன், வர மிளகாய் – 3, பூண்டு – 3 பல், எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து வைக்க வேண்டும். பின்னர் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன் பிறகு அரை மூடி தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். அடுப்பை பற்றவைத்து அடுப்பின் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.
பின்னர் கடாய் நன்றாக சூடானதும் அதில் துருவிய தேங்காயை சேர்த்து லேசாக வருத்து, அதனை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் உளுத்தம் பருப்பையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டையும் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். பிறகு இவை அனைத்தையும் உளுத்தம் பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தும் நன்றாக ஆறியதும் இவற்றை மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இவற்றுடன் உப்பு சேர்த்துக் கொண்டு, முதலில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பின் மீது ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து, எண்ணெய் சேர்த்து, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, உளுத்தம் பருப்பு சட்னியுடன் கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இதனுடன் சுட சுட இட்லி, தோசை வைத்து சாப்பிட்டு பாருங்கள், மிகவும் சுவையாக இருக்கும்.