குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் புரதச்சத்து என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. அதிலும் வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் மட்டுமே அவர்களின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அப்படி பயறு வகைகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆனால் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது. எனவே தினமும் ஒரு பிடி பயிறுவகை குழந்தைகளின் உணவாக இருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி நல்லவிதமாக இருக்கும். அவர்களின் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகள் வெறும் பயிரை சாப்பிட விரும்பவில்லை என்றால் அவர்களுக்கு கொஞ்சம் மசாலா சுவையில் இவற்றை செய்து கொடுக்கலாம். அப்படி மொச்சைப் பயறை வைத்து ஒரு சுவையான மொச்சை கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
மொச்சைப் பயிறு – 100 கிராம், சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, தக்காளி – ஒன்று, தேங்காய் – மூன்று சில்லு, எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் மொச்சைப் பயறை முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். பிறகு மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டி மொச்சை பயிரை குக்கரில் சேர்த்து கொண்டு, அதனுடன் கால் ஸ்பூன் உப்பு மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பின் மீது வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் மூன்று சில்லு தேங்காயை, தேங்காய் துருவலில் வைத்து பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், தக்காளி, பாதி அளவு வெங்காயம் இவை மூன்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி விட வேண்டும். அதன் பின்னர் இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து வதக்கவும். இவற்றில் மசாலா வாசனை சென்றதும் வேக வைத்துள்ள மொச்சை பயிறையும் சேர்த்து 5 லிருந்து 10 நிமிடத்திற்கு கொதிக்க விடவேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அனைத்துவிட வேண்டும்.