அம்மனின் அருள் பெற ‘ஆடி மாத தேங்காய் பால்’ சுலபமாக சுவையாக செய்வது எப்படி?

aadi-paal-amman
- Advertisement -

ஆடி மாதம் வந்து விட்டாலே அம்மனுக்கு விரதம் மேற்கொள்வது, பூஜைகள் செய்வது, கூழ் வார்ப்பது என்று வீடும், கோவிலும் களைகட்ட துவங்கி விடும். அடிக்கடி கோவிலுக்கு செல்வது மற்றும் வீட்டில் வேப்பிலை கட்டி பூஜைகள் செய்வது போன்றவற்றை செய்ய ஆரம்பித்து விடுவோம். இப்படி ஆடி மாதம் அம்மனுக்கு செய்யும் பூஜையில் முக்கியமாக இடம் பெறுவது இந்த தேங்காய் பால் பிரசாதம் ஆகும். ஆடிப்பெருக்கு, அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் அம்மனுக்கு நெய்வேதியம் படைக்க இந்த தேங்காய் பால் ரொம்ப பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. அத்தகைய ஆடி மாத சிறப்பு தேங்காய் பால் எப்படி எளிதாக சுவையாக செய்வது? என்பதை தான் இப்பதிவில் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

ஆடி மாத தேங்காய் பால் செய்ய தேவையான பொருட்கள்:
முழு தேங்காய் – ஒன்று, பொடித்த மண்டை வெல்லம் – முக்கால் கப், பாசிப்பருப்பு – ரெண்டு டேபிள் ஸ்பூன், சுக்கு – ஒரு சிறு துண்டு, ஏலக்காய் – 4, நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு – 10.

- Advertisement -

ஆடி மாத தேங்காய் பால் செய்முறை விளக்கம்:
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு நைவேத்தியம் படைக்க இந்த தேங்காய் பால் பிரசாதமாக வீடுகளில் செய்யப்படுவது வழக்கம். அம்மனின் அருள் பெறவும், ஆரோக்கியம் காக்கவும் ஆடி மாத தேங்காய் பால் செய்ய முதலில் ஒரு முழு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பாசிப்பருப்பை நன்கு வாசம் வர பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் வேறு ஒரு வாணலியில் பொடித்த மண்டை வெல்லத்தை சேர்த்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளுங்கள். பாகு காய்ச்சுவதற்குள் தேங்காய் பால் எடுக்க வேண்டும். நறுக்கி வைத்துள்ள தேங்காய் பற்களை மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பை ஒரு முறை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். சுக்குத் துண்டுகளாக பொடித்து சேருங்கள். பின்னர் வாசத்திற்கு 4 ஏலக்காய்களை சேர்த்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி எவ்வளவு நைசாக அரைக்க முடியுமோ, அவ்வளவு நைசாக அரைத்து முதல் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதே போல ஒவ்வொரு முறையும் கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு மூன்று முறை பால் எடுத்து சக்கையை தூக்கி போட்டு விடுங்கள். பின்னர் பாலை அடுப்பில் வைத்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து சூடேற்றுங்கள். தேங்காய் பால் சூடேற ஆரம்பித்ததும், நீங்கள் காய்ச்சிய வெல்லப்பாகுவை வடிகட்டி அதனுடன் சேர்க்க வேண்டும். இது அதிகம் கொதித்து விடக்கூடாது. நுரை கட்ட ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

நுரைத்து பொங்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு காய விடுங்கள். நெய் நன்கு காய்ந்ததும் முந்திரி பருப்புகளை பொடித்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து தாளிக்க வேண்டும். பின்பு தேங்காய் பாலுடன் இவற்றை சேர்த்து கலந்து சூடாக ஒரு டம்ளரில் பரிமாறி பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும், இதை ஆடி மாதத்தில் செய்வது உடலுக்கு நல்ல ஒரு ஆரோக்கியத்தை கொடுக்கும். நீங்களும் ஆடி மாதத்தில் இதே போல செஞ்சு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுங்கள்.

- Advertisement -